முகப்பு
தமிழ்நாடு

நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைவு: கே.எஸ் அழகிரி இரங்கல்

சென்னை மாநகராட்சி 165 ஆவது வார்டு கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

Updated On : 24 நவம்பர், 2022 at 3:27 PM
மறைந்த சென்னை மாநகராட்சி 165 ஆவது வார்டு கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்
பகிர்:


சென்னை மாநகராட்சி 165 ஆவது வார்டு கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: 

தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சென்னை மாநகராட்சிமன்ற உறுப்பினருமான ஆற்றல்மிக்க செயல்வீரர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் அவர்கள் திடீரென காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இளமை துடிப்போடும், சிரித்த முகத்தோடும் பழகுவதற்கு இனிய பண்பாளராக விளங்கி காங்கிரஸ் கட்சிப் பணிகளில் அயராது உழைத்தவர். 

Advertisement

ஆலந்தூர் தொகுதியில் உள்ள மக்களிடையே இவரது தொண்டால் பொழுதளந்த தூய்மையான சேவையின் காரணமாக அளவற்ற நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர். ஆலந்தூர் நகராட்சிமன்ற உறுப்பினராகவும் மிக சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அந்த மக்களிடையே மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரின் அன்பையும், ஆதரவையும் மிகுதியாக பெற்றவர். இவரது பலமே இவருக்கு இருந்த நன் மதிப்பு தான்.

காங்கிரஸ் தலைமை நடத்துகிற ஆர்பாட்டமோ, போராட்டமோ, பேரணியோ எதுவாக இருந்தாலும் அதற்கான அழைப்பு வந்தவுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தோழர்களுடன் மூவண்ணக் கொடியை கையில் ஏந்தி கம்பீரமாக முன்னின்று செயல்பட்ட தேசிய தளபதியை காங்கிரஸ் கட்சி இழந்திருக்கிறது. சிலவற்றை ஈடு செய்ய முடியும். ஆனால், ஆற்றல் மிக்க தோழர் நாஞ்சில் பிரசாத் மறைவு ஈடு செய்யவே முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பாகும். இதன்மூலம் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தூண் ஒன்று சாய்ந்து விட்டது.

நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

நம்மை விட்டு பிரிந்த நாஞ்சில் பிரசாத் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு ஆலந்தூர், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த தேசிய செயல்வீரருக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.