தமிழ்நாடு

அதிமுக அலுவலக சாவி வழக்கு: ஓபிஎஸ் மனு தள்ளுபடி

DIN

அதிமுக அலுவலக சாவி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் பலர்காயம் அடைந்த நிலையில் அதிமுக அலுவலகமும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. அங்கிருந்த பொருள்களும் கொள்ளை போனது. 

இதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்றது. 

நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுக அலுவலகத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். 

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

கடந்த மாதம் 4 ஆம் தேதி இது தொடர்பான மனுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்குரைஞர்கள் தாக்கல் செய்தனர். 

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது. 

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது. 

இதுதொடர்பாக  எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்த் துறையினர் பதிலளிக்குமாறு நோட்டீஸ்  அனுப்பப்பட்டது. இதற்கு இபிஎஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில், 3 வார இடைவெளிக்குபிறகு அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஒபிஎஸ் எவ்வாறு உரிமை கோருகிறார் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு மனு விசாரணை  வரும் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT