முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 29 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணைக்கு முதலில் மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கால அவகாசம் இதுவரை 14 முறை நீட்டிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் உள்பட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கையை நாளை மறுநாள்(ஆக. 29) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து அதன் மீது விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சசிகலாவை நேரில் அழைக்காதது ஏன்? - நீதிபதி ஆறுமுகசாமி விளக்கம்