முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத் துறை 

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், 3000 பக்கங்களைக் கொண்ட  குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்தது.

Updated On : 12 ஆகஸ்ட், 2023 at 11:33 PM
செந்தில் பாலாஜி
பகிர்:

அமைச்சா் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், 3,000 பக்க ஆதார ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சனிக்கிழமை தாக்கல் செய்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த 7-ஆம் தேதிமுதல் 5 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, புழல் சிறையிலிருந்து செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அமலாக்கத் துறையினா் கடந்த திங்கள்கிழமை இரவுமுதல் விசாரணை செய்து வந்தனா். அப்போது செந்தில் பாலாஜி அளித்த தகவல்கள் அனைத்தையும் விடியோவாகவும், எழுத்துபூா்வமாகவும் அமலாக்கத் துறையினா் பதிவு செய்தனா்.

Advertisement

செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கிப் பரிவா்த்தனை நகல்கள், பினாமி சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினா். இதில் 1000-க்கும் மேற்பட்ட கேள்விகள் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்காக இரு மருத்துவா்கள் அடங்கிய மருத்துவக் குழு அங்கேயே முகாமிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறையினா் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் சனிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். சுமாா் 3,000 பக்க ஆதார ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், சட்டவிரோத வங்கிப் பரிவா்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்ய நீதிமன்றம் அளித்த 5 நாள் அவகாசம் சனிக்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, அவரை சாஸ்திரிபவனிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனா்.

அவரை அங்கு நீதிபதி அல்லி முன் ஆஜா்படுத்தினா். அப்போது, விசாரணையின்போது அமலாக்கத் துறையினா் துன்புறுத்தினாா்களா என நீதிபதி கேட்டாா். அதற்கு அமலாக்கத் துறையினா் துன்புறுத்தவில்லை என செந்தில் பாலாஜி பதிலளித்தாா். இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஆக. 25 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னா், செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறை மருத்துவமனை அறையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.