முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வருகிற ஜன. 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வருகிற ஜன. 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் கடந்த 2016-21 ஆம் ஆண்டு வரை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில் ரூ. 45.20 கோடி சொத்து குவித்ததாக கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் உறவினா்கள் உள்பட 11 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பாக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்ட 11 பேர் தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். கே.பி.அன்பழகன் உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பின் விசாரணை வரும் ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.