முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூரில் பர்மா பஜார் கடைகளை அகற்ற வந்த மாநகராட்சி நிர்வாகம்: திமுக கொடிகளுடன் வியாபாரிகள் போராட்டம்

தஞ்சாவூர் பர்மா பஜார் கடைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் புதன்கிழமை இடிக்க வந்ததற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து திமுக கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:25 PM
தஞ்சாவூர் பர்மா பஜார் கடைகளை அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தையும், லாரியையும் முற்றுகையிட்டு திமுக கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பர்மா பஜார் கடைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் புதன்கிழமை இடிக்க வந்ததற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து திமுக கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் பர்மா பஜாரில் பர்மா அகதிகளின் வாழ்வாதாரத்துக்காக கடைகளை அமைத்துக்கொள்ள 1986-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.இந்த பஜாரில் தற்போது 106 கடைகள் உள்ளன.இதற்காக ஆண்டுக்கு வருவாய்த் துறைக்கு தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை தரை வரியும், மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஏறத்தாழ தலா ரூ.1000 வரியும், தவிர தொழில் வரியும் செலுத்தி வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், அழகி குளத்துக்கான நீர் வழித்தடத்தில் இருப்பதாகவும், அதனால் கடைகளை காலி செய்து மாற்று இடத்தில் அமைத்துக் கொள்ளுமாறும் வியாபாரிகளிடம் மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வந்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் இந்த கடைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரம், லாரியுடன் புதன்கிழமை காலை வந்தனர். இதற்கு பர்மா பஜார் கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை அடைத்து திமுக கொடிகளுடன் ஜேசிபி இயந்திரத்தையும்,லாரியையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வியாபாரிகளிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் சாலையை மறித்து நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி இயந்திரமும்,லாரியும் அகற்றப்பட்டன.

தஞ்சாவூர் பர்மா பஜார் கடைகளை அகற்ற வந்த ஜேசிபி இயந்திரம், லாரி.

இது குறித்து பர்மா பஜார் வியாபாரிகள் தெரிவித்தது:
இந்த இடத்தில் 36 ஆண்டுகளாக முறையாக வரி செலுத்தி கடைகளை நடத்தி வருகிறோம். இந்தநிலையில் இந்த கடைகளைக் காலி செய்து தருமாறு மாநகராட்சி ஆணையர் கூறினார்.

இது தொடர்பாக மாற்று இடம் கேட்டபோது, பீரங்கி மேடு பகுதியில் இடம் தருவதாகவும், அதற்கு தலா ரூ.2 லட்சம் முன் பணம் தர வேண்டும் எனவும், மாத வாடகை தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், நிரந்தர கட்டடமாக அல்லாமல், தற்காலிகமாக தகர சீட் அமைத்துக் கொள்ளுமாறும் மாநகராட்சி அலுவலர்கள் கூறினர். இதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில், இப்போது திடீரென வந்து முன்னறிவிப்பின்றி காலி செய்யுமாறு கூறுகின்றனர். இதனால் இதை நம்பி வாழும் ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மீண்டும் அகதிகளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, அண்ணா சிலை அருகில் உள்ள இடத்தில் ஒதுக்கீடு செய்து கொடுத்தால், நாங்கள் இந்த இடத்தைக் காலி செய்து, மாற்றிக் கொள்வதற்கு தயாராக இருக்கிறோம் அல்லது இதே இடத்தை கொடுத்து அதற்கு என்ன வாடகை நிர்ணயித்தாலும் நாங்கள் செலுத்துவதற்கு தயாராக உள்ளோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →