விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாவது:
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.கஸ்டாலின், தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை உயர்த்துவதற்காகவும் உழவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் ஆட்சிப் பொறுப்பேற்றதுக்கு பிறகு நாங்கள் அதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், விவசாய பெருமக்களுக்கு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் வழங்கப்படுவதாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாய சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதுடன், விளைச்சலும் அதிகரித்து வருகிறது.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினால், நடப்பாண்டில் ஐந்து லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.
குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம் - 2023 குறித்த விவரங்கள்
*ஏக்கருக்கு 45 கிலோ யூரியா
*50 கிலோ டிஏபி
*25 கிலோ பொட்டாஷ் என்ற விகிதத்தில், 2.5 லட்சம் ஏக்கருக்குத் தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்திலும்
*1.24 லட்சம் ஏக்கருக்குத் தேவையான நெல் விதைகள் 50 சதவிகித மானியத்திலும்
*மாற்றுப் பயிர் சாகுபடிக்காக 15,818 ஏக்கருக்கு மாற்றுப் பயிர் சாகுபடித் தொகுப்பும்
*6,250 ஏக்கரில் பசுந்தாளுர விதைகளும்
*747 பவர் டில்லர்களும்
*15 பவர் வீடர்களும் மானியத்தில் விநியோகம் செய்வதற்காக, மொத்தம் ரூபாய் 75 கோடியே 95 லட்சம் மதிப்பில் குறுவை சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.