இயல்புநிலைக்குத் திரும்பியது சென்னை: 41 டிகிரி செல்சியஸை தொடும் வெப்பம்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக சென்னையில் கோடை வெப்பம் குறைந்திருந்த நிலையில், இன்று இயல்புநிலை திரும்பியிருக்கிறது. வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வரும் 5 நாள்களுக்கு 41 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை உருவானது.
இது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புதன்கிழமை (மே 10) தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனாலும், இந்த புயல் சின்னம், எந்த இடத்தில் கரையைக் கடக்கும் என்று துல்லியமாகக் கணிக்கப்படவில்லை. எனினும், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வியாழக்கிழமை (மே 11) நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியான்மா் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் மழை பெய்யுமோ பெய்யாதோ, நிச்சயம் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குநர் பி. செந்தாமரைக் கண்ணன் கூறுகையில், இந்த புயல் சின்னமானது காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்ப்பதால், வடமேற்கு திசைக் காற்றின் ஈரப்பதம் குறைந்து, தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதுபோல, நாடு முழுவதும் அதிகபட்ச வெப்பநிலையானது, அடுத்த 5 நாள்களுக்கு 3.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவரும் கே. ஸ்ரீகாந்த் கூறுகையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவான பிறகு மழை குறைந்துவிடும். இது புயல் சின்னமாக மாறியதும், காற்றின் ஈரப்பதம் குறைந்து, நாடு முழுவதும் வெப்பம் அதிகரிக்கும். இதனால், வட தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பநிலையானது 41 - 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும் என்றும், இது இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.