2 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் விமான நிலையத்திலிருந்து பயணிகள் சேவை!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான சேவை அக். 16 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான சேவை அக். 16 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார்.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க இருப்பதாக எஸ்.ஆர். பார்த்திபன் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | முக்கொம்பு சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: முதல்வர் விளக்கம்
இதுகுறித்து சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
உதான் -5 திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதம் முதல் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு - சேலம் -கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட உள்ளது. அதுபோல கொச்சின் - சேலம் -பெங்களூரு வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும்.
வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும். இதேபோன்று அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் 29 ஆம் தேதி பெங்களூரு - சேலம் - ஹைதராபாத் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. மீண்டும் ஹைதராபாத் - சேலம் - பெங்களூரு வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும். வாரத்தின் நான்கு நாட்களுக்கு திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இண்டிகோ விமான சேவை நடைபெறும்.
இதேபோன்று வாரத்தின் ஏழு நாட்களிலும் சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளது சேலம் - சென்னை விமான சேவையும் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை தொடங்குவதால் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சேலம் மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு ஐந்து முறை விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு, கடும் முயற்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து விமான சேவை இரவு நேரத்திலும் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம்!
இதற்காக விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 250 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் விவசாயிகள் பாதிக்காத வகையில் நிலம் எடுக்கப்பட்டு தற்போது 6,000 அடி நீளம் கொண்ட விமான நிலைய ஓடுபாதை 8,000 அடி நீளம் ஓடு பாதையாக மாற்றப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இரவு நேர விமான சேவையும் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையிலான சேவைகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது விமான நிலைய இயக்குனர் ரமேஷ் உடனிருந்தார்.