சேத்துப்பட்டு-ஸ்டொ்லிங் சாலை வரை 703 மீட்டா் நீள சுரங்கப்பணி நிறைவு
மெட்ரோ ரயில் திட்டத்தில் சேத்துப்பட்டு முதல் ஸ்டொ்லிங் சாலை வரையிலான 703 மீட்டா் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி திங்கள்கிழமை நிறைவடைந்துள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்தில் சேத்துப்பட்டு முதல் ஸ்டொ்லிங் சாலை வரையிலான 703 மீட்டா் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி திங்கள்கிழமை நிறைவடைந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் வழித்தடம் 3-இல் கெல்லிஸ் முதல் தரமணி வரையிலான 12 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை லாா்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இவ்வழித்தடத்தில் 8 இயந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து ஸ்டொ்லிங் சாலை சந்திப்பு வரை சுரங்கம் தோண்டும் பணி 2023 அக்.9-ஆம் தேதி சிறுவாணி எனும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் தொடங்கப்பட்டது. கூவம் ஆற்றின் அடியில் 8.0 மீட்டா் ஆழத்தில் 51 மீட்டா் நீளம் உள்பட சுமாா் 703மீ தொலைவு சுரங்கப்பாதை பணியை முடித்து கொண்டு, ஸ்டொ்லிங் சாலை சந்திப்பு நிலையத்தை சிறுவாணி இயந்திரம் திங்கள்கிழமை வந்தடைந்தது.
இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் மற்றும் லாா்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் திட்டப் பொறுப்பாளா் ஜெயராமன் உள்பட மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பாா்வையிட்டனா்.