தமிழக பாஜக தலைவராக இருக்கும் கே. அண்ணாமலை மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் தில்லிக்கு திங்கள்கிழமை காலை பயணம் மேற்கொண்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், 11.24 சதவிகிதம் வாக்குகளை பாஜக பெற்றது.
இந்த நிலையில், ஓரிரு மாதத்தில் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, சுமார் 6 மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கி அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ளவுள்ளார்.
இதனால், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக கடந்த இரண்டு நாள்களாக தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், அண்ணாமலைக்கும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தமிழகத்தில் நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றுக் கொடுத்ததால், அவரை மாற்றுவதற்கு கட்சித் தலைமை யோசிப்பதாகவும், இடைக்காலத் தலைவரே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை அண்ணாமலை தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது தொடர்பாக மீனவர்கள் பிரதிநிதிகளுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் இந்த பயணத்தின் போது அண்ணாமலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.