பாஜகவுக்கான கதவு அடைக்கப்பட்டுவிட்டது: அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் பதில்
அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவு திறந்தே இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவு திறந்தே இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகுவதாக அறிவித்து, மக்களவைத் தேர்தலில் புதிய கூட்டணியை அதிமுக உருவாக்கி வருகிறது.
இதற்கிடையே, அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவு திறந்தே இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தஞ்சாவூரில் அதிமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் அறிக்கை குழு கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
"அமித்ஷா தனது கட்சியின் நிலைப்பாட்டை கூறியுள்ளார். கூட்டணியின் கதவுகள் திறந்து இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சி நிலைப்பாடு பொருத்தவரை பாஜக ஒரு காலத்தில் தோழமையாக இருந்தது. இப்போது அரசியல் ரீதியாக எதிர்க்கின்ற கட்சி.
பொதுவாகவே எங்களுடைய முன்னோடிகளான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி சிறுமைப்படுத்தும் விதமாக ஒரு மாநிலத் தலைவர் கடுமையான அளவுக்கு விமர்சனம் செய்தார். அவருக்கு கண்டனங்கள் தெரிவித்தபோதும் தொடர்ச்சியாக எங்களைச் சிறுமைப்படுத்திய தலைவரை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
பாஜகவை கழட்டிவிட்ட பிறகு தமிழ்நாடு முழுவதும் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பாஜகவுடன் இப்போது மட்டுமல்லாமல், எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு தமிழ்நாடு முழுவதும் வெடி வெடித்துக் கொண்டாடினர். எங்கள் நிலைப்பாட்டை பொருத்தவரை கதவு சாத்தப்பட்டுவிட்டது. அவர்கள் திறந்து வைத்திருக்கலாம். அவர்கள் வரக்கூடாது என நாங்கள் சாத்திவிட்டோம்.
இதுதான் எங்கள் நிலைப்பாடு. எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்” என்றார்.