முகப்பு
தமிழ்நாடு

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நாமக்கல்லில், ஆஞ்சனேய ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்குக்கு வியாழக்கிழமை (ஜன.11) அதிகாலை 1,00,008 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி, 2024 at 8:31 AM
நாமக்கலில் ஆஞ்சனேய ஜெயந்தியையொட்டி, ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:51 PM


நாமக்கல்: நாமக்கல்லில், ஆஞ்சனேய ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்குக்கு வியாழக்கிழமை (ஜன.11) அதிகாலை 1,00,008 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் சர்வ அமாவாசை தினத்தில்  இக்கோயிலில் சுவாமிக்கு ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

அதன்படி, நிகழாண்டில் வியாழக்கிழமை ஆஞ்சனேய ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 5 மணிக்கு 1,00,008 எண்ணிக்கையில் வடைமாலை சாத்தப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சனேயரை தரிசித்தனர்.    

நாமக்கல் ஆஞ்சனேயரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

இதனை தொடர்ந்து நண்பகல் 11.30 மணியளவில் வடைமாலை அகற்றப்பட்டு, நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றாலான சிறப்பு அபிஷேகம், சொர்ணாபிஷேகம் நடைபெற உள்ளது. பிற்பகல் 1 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆஞ்சனேயரை தரிசிக்க ஒரு மணி நேரத்திற்கு 1500 பக்தர்கள் வீதம்  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ரூ.250 சிறப்பு கட்டண தரிசனம் உள்ளது. சுவாமிக்கு சாத்துப்படி செய்த வடைகள் பொட்டலமிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும்.

இந்த விழாவையொட்டி, பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் மட்டுமின்றி, சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஐயப்ப பக்தர்களும் ஏராளமாக வந்திருந்து சுவாமியை தரிசித்தனர். பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது. கோயில் பகுதி முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.