வங்கக் கடலில் நாளை உருவாகிறது புயல்!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறுவது பற்றி...
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புதன்கிழமை புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மேலும் வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகின்றது.
தற்போது, நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இதையும் படிக்க : சென்னை, புறநகரில் 5 நாள்களுக்கு பலத்த மழை!
மேலும், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவ. 27ஆம் தேதி புயலாக வலுப்பெறவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நெருங்கி பின்னர், அடுத்த 2 நாள்களில் புயலாக தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு செளதி அரேபியா பரிந்துரைத்த ’ஃபெங்கல்’ என்று பெயரிடப்படவுள்ளது.
தமிழகத்தில் கனமழை
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களிலும் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
அடுத்தடுத்த நாள்களில் கனமழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.