முகப்பு
தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நாளை(ஏப். 11) விருப்ப மனு!

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நாளை(ஏப். 11) விருப்ப மனு பெறலாம் என பாஜக அறிவிப்பு.

Updated On : 10 ஏப்ரல், 2025 at 11:22 AM
சென்னை கமலாலயம் (கோப்புப் படம்)
பகிர்:

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் நாளை(ஏப். 11) விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் என்று பாஜக அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 2023 செப்டம்பரில் முறிந்த அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதனிடையே தமிழகத்திற்கு புதிய பாஜக தலைவரை தேர்வு செய்யும் பணிகளையும் கட்சி மேற்கொண்டுள்ளது. புதிய தலைவர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில் பாஜக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நாளை(ஏப். 11) விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரி சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"நமது கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் திருவிழாவின் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். கிளை தொடங்கி மாவட்டத் தலைவர் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது

மேற்கண்ட தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

நாளை 11.04 2025 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாநில தலைவருக்கான தேர்தல்

மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும்.

மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும்

மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னை வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →