திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக எம்பிக்கள் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி இந்து அமைப்பினர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அனுமதி அளித்தார்.
ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதால், மலை உச்சியில் தீபம் ஏற்ற காவல்துறையினர் புதன்கிழமை அனுமதிக்கவில்லை.
தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்த நிலையில், நேற்று மாலை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இன்றே தீபத்தை ஏற்ற வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டார்.
ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்து, மதுரை காவல்துறையினர் நேற்றும் அனுமதி மறுத்ததால் திருப்பரங்குன்றம் பகுதியில் அசாதாரண சூழல் நிலவி வருகின்றது. இந்து அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு முறையிடவுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
மாநிலங்களவையில் திருச்சி சிவாவும், மக்களவையில் டி.ஆர். பாலுவும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதில், “தமிழ்நாட்டில் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்ட பிரச்னை வகுப்புவாத பதற்றத்தை தூண்டியிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகா தீபத்தன்று திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் பகுதியில் தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.