விடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவத்துள்ளார்.
தருமபுரியில் நடந்த திருமண நிகழ்வில் அவர் பேசுகையில், நேற்று முன்தினம், நம்முடைய மகளிருக்கான திராவிட மாடல் அரசின் சார்பில் தீட்டப்படும் திட்டங்கள் மூலமாக கிடைத்துக்கொண்டிருக்கும் சாதனைகளை அடிப்படையாக வைத்து அந்த சகோதரிகளின் வெற்றிக்கான அடையாளமாக, அதை பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’என்ற தலைப்பில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தினோம். நீங்களும் அதை தொலைக்காட்சிகளில் பாத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அதேபோல், நம்முடைய மகளிருக்கு கலைஞர் பெயரால் வழங்கக்கூடிய மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் மாதாமாதம் நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வழங்கிக்கொண்டிருக்கின்றோம். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலமாக கூடுதலாக 17 இலட்சம் சகோதரிகளுக்கு அந்த ஆயிரம் ரூபாயை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறேன். ஏற்கெனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1 கோடியே 13 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுவந்தது.
ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலமாக மேலும் கூடுதலாக 17 இலட்சம் சகோதரிகளுக்கு அதாவது 1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறோம். இன்னும் கூட சில தகுதி உள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் நிச்சயமாக வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும், உறுதியையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அதுமட்டுமல்ல, அது இன்னும் உயரும் என்று கூட சொல்லியிருக்கிறேன். அப்படிப்பட்ட மகிழ்ச்சியான நாளில்தான், மற்றொரு பெருமிதமான செய்தியும் வெளியானது. அதை தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். அதாவது, ஒரு நாட்டின், ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான அறிகுறியாக இருக்கும் GDP வளர்ச்சியில் இன்றைக்கு தமிழ்நாடுதான் நம்பர் ஒன் மாநிலமாக உருவாகியிருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல. ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை!
நீங்கள் நினைத்துப் பாருங்கள். எவ்வளவோ தடங்கல்கள். எவ்வளவோ சோதனைகள். அந்த சோதனைகளையெல்லாம் தாண்டி இன்றைக்கு சாதனை படைத்திருக்கும் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.