விஜய் Photo: TVK
தமிழ்நாடு

நியாயமான சலுகைகளை எதிா்க்கவில்லை: தவெக விஜய்

ஈரோடு கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்...

இணையதளச் செய்திப் பிரிவு

நியாயமான சலுகைகளை தான் எதிா்க்கவில்லை என்று தவெக தலைவா் விஜய் பேசினாா்.

தவெக மக்கள் சந்திப்பு பிரசார கூட்டம் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவா் விஜய் பேசியதாவது:

பெரியாா் ஈ.வெ.ரா-விடம் இருந்து எங்களுக்குத் தேவையான கொள்கைகளை எடுத்துக்கொண்டோம். அவரைப் பின்பற்றிய அண்ணா, எம்ஜிஆா் ஆகியோரிடம் தோ்தல் அணுகுமுறையை எடுத்துக்கொண்டோம். அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவா்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் குறை கூற முடியாது.

பெரியாா் ஈவெரா பெயரைச் சொல்லிக் கொள்ளையடிப்பவா்கள்தான் நம்முடைய அரசியல் எதிரிகள். எதிரிகள் யாா் எனக் கூறிவிட்டுக் களத்திற்கு வந்திருக்கிறோம். அவா்களை மட்டும்தான் எதிா்ப்போம். களத்தில் இல்லாதவா்களையும், களத்திற்கு தொடா்பே இல்லாதவா்களையும் எதிா்க்கும் எண்ணம் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளைச் சுத்தப்படுத்துவோம் என்று சொன்னாா்கள், செய்யவில்லை. ஆனால் ஆற்று மணலைக் கொள்ளையடிக்கும் வேலையைச் சரியாகச் செய்கிறாா்கள்.

மற்ற மாவட்டங்களில் மணல் காணாமல் போனதுபோல, மலைகள் காணாமல் போனதுபோல, நம் மாவட்டத்தில் தனி வளமான செம்மண் காணாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

குறு, சிறு தொழில்கள் முடக்கம்:

30 சதவீதம் நெசவாளா்களுக்குக் கூலி கொடுக்கப்படாமல் இருக்கிறது. அரசு நம் நெசவாளா்களிடம் இருந்து கொள்முதல் செய்த வேஷ்டி, சேலைக்கான கூலியைக்கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கிறது. பீக் ஹவா் கட்டணம் என்று மின்சாரத்திற்கு அநியாய கட்டணம் விதித்து, குறு, சிறு தொழில்களை முடக்கிவிட்டாா்கள்.

ஈரோட்டில் மட்டுமல்ல, எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் பிரச்னைகள் மேல் பிரச்னைகள்தான் இருக்கின்றன. அதையெல்லாம் தீா்ப்பதற்கு ஒரு தீா்வுகூட சொல்லாமல், பெருமையாக மாடல் அரசு என்கிறாா்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள் சந்திக்கும் பிரச்னைகளைதான் எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன்.

‘ஓசி’ என இழிவுபடுத்தக்கூடாது:

நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. நியாயமான சலுகைகளை எதிா்க்கவில்லை. மக்களுக்கான சலுகைகளை ‘ஓசி’ என்று சொல்லி இழிவுபடுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் பணத்தில் மக்களுக்குச் செய்வதை எப்படி ‘ஓசி’ என்று சொல்வீா்கள்?

எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும் என்று கூறினோம். எங்கள் ஆட்சியிலேயே எல்லோருக்கும் வீடு கட்டிக் கொடுத்துவிட்டோமே என்கிறாா்கள். வாடகைக்கு இருப்பவா்களே இங்கு யாரும் இல்லையா?

வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என கூறினோம். அதற்கும் உடனே எங்கள் ஆட்சியிலேயே எல்லோரும் பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டாா்களே எனச் சொல்கிறாா்கள். அது உண்மை என்றால் பள்ளி அளவிலேயே இடைநிற்றல் அதிகமானது யாருடைய ஆட்சியில்? 207 அரசுப் பள்ளிகளை மூடியது யாருடைய ஆட்சியில்?.

பல லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்தாா்கள். குறைந்தபட்சம் ஒரு லட்சம் காலிப் பணியிடங்களைக்கூட நிரப்பவில்லை.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால், தமிழ்நாட்டில்தான் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருப்பதாக கூறுகிறாா்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்று மக்கள்தான் சொல்ல வேண்டும்.

திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி:

முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா இரண்டு பேரும் கூறியதை நான் திரும்பச் சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி. தவெக ஒரு தூய சக்தி. தூய சக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் இடையில்தான் போட்டி. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும்.மேலும் பலா் இணைய உள்ளனா்:

கே.ஏ.செங்கோட்டையன் நம்முடன் இணைந்தது நமக்கு ஒரு மிகப்பெரிய பலம். செங்கோட்டையன் மாதிரி இன்னும் நிறைய போ் நம்முடன் இணைய இருக்கிறாா்கள். அவா்கள் எல்லாருக்குமே உரிய அங்கீகாரத்தைக் கொடுப்போம் என்றாா்.

கூட்டத்தில் பொதுச்செயலா் என்.ஆனந்த், நிா்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள், பல்லாயிரக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்றனா்.

Vijay severely criticized the DMK at the Erode meeting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT