முகப்பு
தமிழ்நாடு

நிதிப் பகிர்வைக் குறைக்கும் மத்திய அரசு? ராமதாஸ் கண்டனம்!

தற்போதுள்ள 41% நிதிப் பகிர்வினை 50%-ஆக உயர்த்தவும் மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Updated On : 28 பிப்ரவரி, 2025 at 11:04 AM
பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களையடுத்து, மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பகிர்வினை 41 சதவிகிதத்திலிருந்து 40-ஆக குறைப்பதற்கு நிதி ஆணையத்திடம் நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நிலையில், நிதி அமைச்சகத்தின் இந்தப் போக்குக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது ``மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை குறைக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. மத்திய அரசின் இந்த முடிவால், மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு ரூ. 35,000 கோடிக்கும் அதிகமாக குறையக்கூடும். மாநிலங்களின் நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கு போதுமானதாக இல்லை என்று கோரி வரும்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். மத்திய அரசுக்கு மிக அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். ஆனால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு மிகவும் குறைவாகும்.

வரி வருவாய் பகிர்வில் மாநிலங்களின் பங்கு 40% ஆக குறைக்கப்பட்டால், இப்போது மத்திய அரசின் ரூ. 100 வரி வருவாயில் தமிழகத்துக்கு கிடைக்கும் ரூ. 1.64-யும் ரூ. 1.60-ஆக குறைந்து விடும். இது தமிழகத்தைக் கடுமையாக பாதிக்கும். மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை 41 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

நிதிப் பகிர்வைக் குறைப்பது குறித்து, மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும், அதன்பின் மத்திய அரசின் முடிவு அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-ஆம் நிதி ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கூட்டணி இருந்தும், மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருப்பது அரசியல் விமர்சகர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.