இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய அரசு முறை பயணத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
சுமார் 99% வரிப்பிரிவுகளில் (tariff lines) வரி நீக்கம் செய்ததோடு, இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், விமான பாகங்கள் ஆகியவற்றை மிகவும் மலிவான விலையில் பெற வழிவகுத்துள்ளது. முதலீட்டை மேம்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் உந்துதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து ஜவுளி, தொழில்நுட்ப ஜவுளி, கடல் சார்ந்த உணவு வகைகள், காலணிகள், நகைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பயனளிக்கும். அதிலும் குறிப்பாக, காஞ்சிபுரம் புடவைகள், திருப்பூர் பின்னலாடைகள், ஈரோடு மஞ்சள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், வேலூர் காலணிகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தையிலேயே இருந்த வர்த்தக ஒப்பந்தத்தைத் தற்போது தனது பயணத்தால் சாத்தியமாக்கி பாரதத்தின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ள நமது நாட்டின் வளர்ச்சி நாயகன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.