மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் விபத்து: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்!
மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக...
மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் சரக்கு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை அழகர்கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு காரில் திரும்பியபோது, சாலை நடுவில் பழுதாகி நின்ற சரக்கு லாரியின் மீது கார் மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். பின்னர், அழகர் கோயில் செல்வதற்காக தத்தனேரி பகுதியில் உள்ள வாடகை கார் நிறுவனம் மூலமாக கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்ற ஓட்டுநர் காரை ஓட்டிச்சென்றுள்ளார். தொடர்ந்து, கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரை நோக்கி காரில் திரும்பியுள்ளனர். அப்போது மதுரை நத்தம் பறக்கும் பாலத்தின் மீது கார் வேகமாக வந்து கொண்டிருந்தபோது, பாலத்தில் நடுவே செங்கல் ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று பழுதாகி நின்றுள்ளது.
அதனைக் கவனிக்காமல் லாரி மீது கார் வேகமாக மோதியதில் கார் முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநரான மதியழகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும், காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: டாஸ்மாக்: குடும்பத்துடன் குடிக்கும் போராட்டம் - தவெக அறிவிப்பு!
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போக்குவரத்து காவல் துறையினர், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஓட்டுநரின் உடல் மீட்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.