கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், கேப்டன் மறைந்து விட்டார், கட்சி மறைந்து விட்டது என்று கூறியவர்களெல்லாம் தற்போது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். தேமுதிக அங்கம் வகிக்காமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள்.
2026 இல் தேமுதிக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். எஸ்ஐஆர் என்றால் என்ன என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் இதுவரை தமிழக அரசியலில் நாம் பார்க்காத தேர்தலாக அமையும். ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் தேமுதிக சார்பில் மக்கள் உரிமை மாநாடு 2.o நடைபெறும். அதில் கூட்டணி குறித்து தெளிவான முடிவை அறிவிப்போம். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.
மேலும் கோவை, மதுரைக்கு இடையே வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் ஆளும் கட்சியினர் நிறைவேற்ற வேண்டும். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தேமுதிக வகிக்கும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணி அமைச்சரவை அமையும். கூட்டணி அமைச்சரவை என்பது தமிழ்நாட்டில் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் வட நாடுகளில் உள்ளது. இது தற்பொழுது தமிழகத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.