டிட்வா புயல்: பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்!
9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம் பற்றி...
'டிட்வா' புயல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நாளை (நவ. 29) நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிச. 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசுத் தேர்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 1991-1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு நாளை(நவ. 29, சனிக்கிழமை) அன்று நடைபெறவிருந்தது.
இந்நிலையில் டிட்வா புயலால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிச. 6 ஆம் தேதி, சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகளுக்கு ஆண்டிற்கு ரூ.1,000/- வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 2025-26 கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள (சென்னை தவிர்த்து) ஊரகப் பகுதியில் கிராமப் பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பு ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கடந்த நவ. 4ல் முடிவடைந்துள்ளன.