வேலூர்: வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள வேலூர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தால் அதனை வெளியேற்ற அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூரில் இன்று ஆட்சியர் சுப்புலெட்சுமி செய்தியாளர்களை சந்தித்தபோது,"வேலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையினால் பொன்னையாற்றில் 6,552 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அனைத்து மாவட்ட அதிகாரிகளையும் களத்தில் இறங்கி, தாழ்வான பகுதிகளை கண்டறிந்து வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தால் அதனை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.
குடியாத்தம் மோர்தானா அணையில் இருந்து 1600 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு கவுண்டன்யா நதியில் வந்து கொண்டிருக்கிறது.
பாலாம்பட்டு பகுதியில் பாலம் பிரச்சனை காரணமாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு," ஊரக வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை வழங்கியுள்ளார்கள். ஏற்கனவே அந்தப் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. தண்ணீர் அதிகமாக வந்ததால் அந்த பாலம் மூழ்கியுள்ளது. அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதா என கேட்டதற்கு,"கடந்த செவ்வாய் கிழமை அனைத்து அதிகாரிகளுடன் பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்றது. அவசரகால உதவி எண் 24 மணி நேரமும் செயல்படும். இதில் எங்கிருந்து புகார் வந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கிறார்கள்" என்றார்.
இதையும் படிக்க... குறுஞ்செய்தியை திருடும் செயலி! பதிவிறக்கம் செய்தால் எல்லாம் காலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.