நமது நிருபர்
தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது, மாநில அரசின் விசாரணை அதிகாரத்தைப் பறிப்பதாக அமையாதா எனக் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டது.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் உள்பட பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டன.
தனிநபர் உரிமையில் குறுக்கீடு: இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் முன்வைத்த வாதம்: டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுதான் எஃப்ஐஆர் பதிவு செய்ய முதலில் உத்தரவிட்டது. மொத்தம் 41 எஃப்ஐஆர்-கள் பதிவு செய்யப்பட்டன. அதில் 36 முடித்து வைக்கப்பட்டன. அரசு நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ள என்ன முகாந்திரம் உள்ளது? வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 41 பேரிடம் இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தை முடித்து வைக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி வாதிடுகையில், "அமலாக்கத் துறையினர் டாஸ்மாக் நிறுவனத்துக்குள் புகுந்து ஊழியர்களின் கைப்பேசிகளை வலுக்கட்டாயமாக எடுத்திருக்கிறார்கள். அதில் இருக்கிற தரவுகளை எந்த அனுமதியும் இன்றி பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். இது தனிநபர் உரிமையில் குறுக்கிடுவதாகும். பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் 66(2) பிரிவின்படி, விசாரணையில் கிடைத்த தகவல்களை அமலாக்கத் துறை அளிக்க வேண்டும்' என்றார்.
நீதிபதிகள் கேள்வி: அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம், "தமிழக அரசு எந்தவொரு வழக்கையும் விசாரிக்கவில்லை எனக் கூறி அனைத்து வழக்குகளையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ளுமா?
தமிழக அரசும் இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்கிறது. இந்நிலையில், அமலாக்கத் துறை விசாரிப்பது மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாக அமையாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆதாரங்கள் உள்ளன: இதற்குப் பதிலளித்த எஸ்.வி. ராஜு, "டாஸ்மாக்கில் மிகப்பெரும் ஊழல் நடந்துள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதை விசாரணைகள் உறுதி செய்துள்ளன. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும், ஆதாரங்களை சேகரிப்பதற்காகவே டாஸ்மாக் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் (அரசு) ஒன்றன்பின் ஒன்றாக எஃப்ஐஆர்களை முடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 37 எஃப்ஐஆர்களை அவர்கள் குறுகிய காலத்தில் முடித்து விட்டனர். இந்த விவகாரத்தில் நாங்கள் வழக்குப் பதிந்து சோதனை மட்டுமே மேற்கொண்டோம்; யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. மாநில சுயாட்சி என்ற வாதத்துக்குள் ஊழல் மறைந்து கொள்கிறது' என்றார்.
தடை உத்தரவு தொடரும்: இதைத் தொடர்ந்து, "பண முறைகேடு தடுப்புச் சட்டம் தொடர்பான வேறு ஒரு வழக்கு உச்சநீதிமன்ற மறு ஆய்வில் இருப்பதால், அந்த விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அது வரையில் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்குத் தடை விதித்து, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடரும் என நீதிபதிகள் கூறினர்.
கடந்த மே 22-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, "அமலாக்கத் துறை அனைத்து வரம்புகளையும், கூட்டாட்சி விதிகளையும் மீறுகிறது' என்று கூறி டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.