தீபாவளி விடுமுறையொட்டி, கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கனரக வாகனங்களுக்கு மாற்று வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிக்கை விடுமுறையொட்டி நாளைமுதல் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பொதுப் போக்குவரத்து மற்றும் சொந்த வாகனங்களில் வெளியேற திட்டமிட்டிருப்பார்கள்.
இந்த நிலையில், சென்னை நகர்ப் பகுதி, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களுக்கான வழித்தட மாற்றுப் பாதையை தாம்பரம் மாநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தாம்பரம் மாநகர காவல்துறை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை (KCBT) நோக்கிச் செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லவும், நகரில் நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, தாம்பரம் மாநகர காவல்துறை, பின்வரும் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான வழித்தட மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது.
அக். 17, 18 ஆம் தேதிகளில் சென்னை மற்றும் ஆவடி பகுதிகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள், பூந்தமல்லியிலிருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் - திருவண்ணாமலை, திருக்கோவிலூர், வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மதுரவாயல் பகுதியிலிருந்து தாம்பரம், ஜிஎஸ்டி நோக்கி வரும் கனரக வாகனங்கள், மதுரவாயலில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள், ஓரகடம் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் திருவண்ணாமலை திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அக். 21, 22 ஆம் தேதிகளில் செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
இரும்புலியூர் பாலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், உடனடியாக கனரக வாகனங்கள், வண்டலூர் வெளிவட்டச் சாலை மற்றும் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாகத் திருப்பிவிடப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.