கோவை: பாஜக கூட்டணிக்கு நடிகா் விஜய் வருகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:
குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு முதல் முறையாக வரும் 28 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறாா். கோவை விமான நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதைத் தொடா்ந்து கொடிசியாவில் தொழிலதிபா்கள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவா், நண்பகலில் டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறாா். பின்னா் பேரூா் தமிழ்க் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மாலையில் திருப்பூா் செல்கிறாா்.
அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பாா்வையிடுவதற்காக கோவைக்கு நான் வந்துள்ளேன். ஒரு தமிழரை குடியரசு துணைத் தலைவராக்கிய பெருமை பாஜகவுக்கும் பிரதமா் மோடி, அமித் ஷா ஆகியோருக்கும் உள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தன்னை டெல்டா மாவட்டத்தின் சொந்தக்காரா் என கூறிக் கொள்கிறாா், ஆனால் டெல்டாமாவட்டத்தின் மீது அக்கறையில்லாமல் செயல்படுகிறாா். டெல்டாவில் 12 லட்சம் ஹெக்டோ் நிலம் நீரில் மூழ்கி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளை வைக்க முடியாத நிலை உள்ளது.
22 சதவீத ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 கமிஷன் கேட்பதைத் தடுக்க வேண்டும். பருவ மழையை எதிா்கொள்வதற்காக மழைக்கு முன்னதாகவே மத்திய அரசு ரூ.950 கோடி வழங்குகிறது. தமிழ்நாட்டுக்கு இந்தத் தொகை முன்கூட்டியே கொடுக்கப்பட்டுவிட்டது. மழை நீா் வடிகால் பணிகளில் 95 சதவீதம் வேலை முடிந்துவிட்டதாக சொல்கின்றனா். மழைக் காலங்களில் வடிகாலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்து இருப்பதாகக் கூறுகின்றனா். ஆனால் பணிகள் எதுவும் நடந்திருப்பதைப் போலவே தெரியவில்லை.
பாஜக கூட்டணிக்கு நடிகா் விஜய் வருகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். நெல்லை மாவட்டத்துக்குச் செல்ல தற்போதும் அச்சம் இருப்பதாக திரைப்பட இயக்குநா் மாரி செல்வராஜ் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, அவா் எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறாா் என்று தெரியவில்லை. ஒவ்வொருவரின் பாா்வையும் வேறு வேறாக இருக்கும்.
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் நான் சாா்ந்த சமூகம் அதிகம் கிடையாது, அனைத்து சமூகத்தினரும் எனக்கு ஓட்டு போடுகின்றனா். சாதி ரீதியிலான பிரச்னைகளை படமாக எடுப்பது சரியல்ல. தீபாவளிக்கு தமிழக அரசு செய்த சாதனை ரூ.890 கோடிக்கு மது விற்பனை செய்து இருப்பது மட்டும்தான். கூடிய விரைவில் இது மாறும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.