செங்கோட்டையன் பதவிப் பறிப்பு என்பது சர்வாதிகார உச்சநிலை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,
கழகம் இணைய வேண்டும் என்பது அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் மனதில் இருக்கிறது.
தலைவர் மீதும் அம்மா மீதும் கழகத்தின் மீதும் பாசம், பற்று கொண்டிக்கிற பொதுமக்களையும் புறந்தள்ளிவிட்டு, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை.
உலகத்திலேயே கழகம் இணையக் கூடாது என்று சொல்லும் ஒரே நபர் யார்? கழகம் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அடிப்படைத் தொண்டனின் அபயக் குரலாக இருக்கிறது. அதற்காகவே 10 நாள்கள் கெடுவையும் செங்கோட்டையன் கொடுத்திருக்கிறார்.
ஏன் கொடுத்தார்? கருத்து வேறுபாடு உடையவர்களெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும், கழகம் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் கெடு விடுத்தார். இதனை தவறு என்று யாரும் சொல்லவில்லை. சர்வாதிகார உச்சநிலைக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
கழகத்தின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயல்பட்டவர்கள் மீதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ கூறவில்லை.
50 ஆண்டுகால வரலாறும், 30 ஆண்டுகள் ஆட்சியும்செய்த அதிமுக, இன்று இந்த நிலையில் இருக்கிறது. தொடர்தோல்வி; இது தேவைதானா? நம்மிடம் கட்சியை ஜெயலலிதா எப்படி ஒப்படைத்தார்கள்? 10 நாள் பொறுத்திருந்து பார்ப்போம். ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் எழுச்சி நிகழ்கிறது. செங்கோட்டையனின் சபதம் வெற்றிபெற எனது வாழ்த்துகள்.
2026 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையோடுதான் இந்தக் களத்தில் இறங்குகிறோம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.