பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தின் உரிமை தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கேவியட் மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கு இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகின்றது. இருவரும் மாறிமாறி ஊடகங்கள் மற்றும் கூட்டங்கள் வாயிலாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
கட்சியின் நிறுவனரான தானே தலைவராக செயல்படப் போவதாக ராமதாஸும், பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தானே தலைவராக தொடர்வதாக அன்புமணியும் அறிவித்துள்ளனர்.
மேலும், கட்சியின் பழைய நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை இருவரும் நியமித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே, இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாமகவின் கூட்டணியையும் வேட்பாளர்களையும் யார் அறிவிப்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தின் உரிமை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில், ராமதாஸ் நியமித்த கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தாரப்பினர் கட்சியின் பெயருக்கோ, மாம்பழம் சின்னத்துக்கோ உரிமை கோரினால், தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.