மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த 6 பேரில் 3 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் தாய் உள்பட 4 பேர் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் குமார் மகன் வைரமுத்து(28). டூவீலர் மெக்கானிக்கான இவரும் அதே பகுதியில் காலனித் தெருவைச் சேர்ந்த குமார் மகள் மாலினி(26) என்ற பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எனினும் மாலினியின் தாய் மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மாலினியின் காதலுக்கு அவரது தாய் விஜயா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இரு குடும்பத்தினரிடையே பிரச்னை நிலவி வந்துள்ளது. இதுதொடர்பான புகாரின்பேரில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தபோது, வைரமுத்துவை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக மாலினி உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாலினியின் குடும்பத்தினர் அவரிடம் எழுத்துப்பூர்வமான உறுதியை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து மாலினி தனது உறவினர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், மாலினி பதிவுத் திருமணம் செய்வதற்கான சான்றிதழை எடுத்து வருவதற்காக திங்கள்கிழமை சென்னை சென்றார். அன்றிரவு பணிமுடிந்து வீடு திரும்பிய வைரமுத்துவை அடியமங்கலத்தில் மர்ம கும்பல் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். மாலினியின் தாய் விஜயா மாற்றுச் சமுதாயத்தைச் சேரந்தவர் என்பதால் அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வைரமுத்து குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. சீனிவாசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன், விசிக மாவட்ட செயலாளர் சிவ.மோகன்குமார் உள்ளிட்ட அக்கட்சியினர், வைரமுத்துவின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் மாலினி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் 4 மணி நேரத்துக்கு மேலாக நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் வைரமுத்துவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து, நேற்று இரவில் கொட்டும் மழையிலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
முன்னதாக, மாலினியின் சகோதரர் குகன்(24), குகனின் நண்பர் அன்புநிதி(19), மாலினியின் சித்தப்பா பாஸ்கர்(42) உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4 தனிப்படைகள் அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் 5 பேரை கைது செய்து, அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், வழக்கின் திடீர் திருப்பமாக புதன்கிழமை மாலினியின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும், வழக்கில் இருந்து 3 பேர் விடுவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட விஜயா(45), குகன்(24), அன்புநிதி(19), பாஸ்கர்(42) ஆகிய 4 பேரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து, வைரமுத்துவின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிக்க | மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.