அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மூத்த தலைவர் செங்கோட்டையன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அப்போதுதான் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும் என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
மேலும், கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார். இதனால், கட்சிக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டார்.
அவர் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளையும், அதே போன்று அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட 13 பேரின் கட்சிப் பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரும் மீண்டும் அதிமுகவில் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டுக்கு திங்கள்கிழமை அண்ணாமலையும், அதைத்தொடர்ந்து, புதன்கிழமை செங்கோட்டையனும் ஆலோசனை நடத்தினர். இருவரும் ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், இதனை முற்றிலுமாக மறுத்த செங்கோட்டையன், “சென்னையில் சிகிச்சைப் பெற்று வரும் எனது மனைவியைப் பார்க்க வந்தேன். அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை” என மறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் விருப்பப்பட்டால் அவரை சந்திப்பேன் எனத் தெரிவித்திருந்த நிலையில், இருவரும் நேற்றிரவு(செப்.25) பன்னீர்செல்வத்தின் வீட்டில் இருவரும் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கோட்டையன் அடுத்ததாக சசிகலாவையும் சந்திக்கவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே, தினகரனைச் சந்தித்தை முற்றிலுமாக மறுத்திருந்த செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்தையும் மறுத்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் இணைவாரா? அல்லது அதிமுகவின் கொங்கு மண்டலத்தில் முக்கிய புள்ளியான செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினர், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவினர் சேர்ந்து தனியாக கூட்டணி அமைத்து வரும் பேரவைத் தேர்தலை எதிர்கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.