கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணைக்காக தில்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை காலை ஆஜராகியுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து இரண்டு நாள்கள் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினா்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளிடம் 3 நாள்கள் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜன.12) நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவா் விஜய்க்கு சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னையில் இருந்து தனி விமானத்தில் திங்கள்கிழமை தில்லி புறப்பட்ட விஜய், காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
இந்த விசாரணையின்போது, சம்பவத்தன்று கூட்டத்துக்கு தாமதமாகப் புறப்பட்டது ஏன்? உள்பட பல்வேறு கேள்விகள் விஜய்யிடம் கேட்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சுமார் 20 நேரம் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தில்லியில் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி தில்லி போலீஸாரிடம் தவெக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு நடைமுறைகள் அடிப்படையில் தில்லி விமான நிலையத்தில் இருந்து விஜய் செல்ல உள்ள அனைத்து பகுதிகளிலும் முழுப் பாதுகாப்பை தில்லி போலீஸாா் வழங்கியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.