மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் சுமார் 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகின்றது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 9.06 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. பாசன பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து பாசன தேவையானது குறையும்.
நடப்பு நீர் பாசன ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமானதாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு மாதம் முன்னதாக ஜூலை 1 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன் பிறகு டிசம்பர் 15 ஆம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜனவரி 15 ஆம் தேதி வரை தண்ணீர் திறப்பு காலம் நீட்டிக்கப்பட்டது.
இன்று (ஜன. 15) மாலை வரை மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு ஆழ்வாய் பாசனத்திற்கு 199 நாள்களுக்கு 8.6 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு போதுமானதாக இருந்ததால் 62 நாள்கள் கால்வாய் பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வினாடிக்கு 26 கன அடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 97.25 அடியாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.