அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் எங்கள் கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உறுதியாகக் கூறுகிறேன், வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியை அகற்றுவதுதான் எனது மற்றும் எங்களின் பிரதான விருப்பம். தேமுதிக எங்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து தற்போது நான் எந்தக் கருத்தும் கூற முடியாது.
இருப்பினும், ஒரு வார காலத்திற்குள் கூட்டணி குறித்த மிகப்பெரிய மற்றும் முக்கியமான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். பொறுத்திருந்து பாருங்கள். தமிழகத்தில் சொத்து வரி 300 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது சாமானிய மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்கள்தான் மற்றவர்களை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்தமட்டில் யாரும் யாருக்கு அடிமை இல்லை. விஜய் எங்களை ஏன் விமர்சிக்கவில்லை என்றால், நாங்கள் 'தீய சக்தி' இல்லை என்பது அவருக்குத் தெரியும். அதனால்தான் அவர் எங்களை விமர்சிக்கவில்லை. அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.