இரவிங்கு தீயாய்... ! சென்னையில் பகல் நேரத்தைப் போலவே வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சி
சென்னையில் பகல் நேரத்தைப் போலவே வீடுகளுக்குள் வெப்பம் வீசுவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகரில் இரவிலும் குளிர்ச்சியில்லாமல், பகல் நேரத்தைப் போலவே வீடுகளுக்குள் வெப்பம் வீசுவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
பொதுவாக பகல் நேரத்தில் வெய்யில் எவ்வளவுதான் வாட்டினாலும் இரவில் சற்று குளிர்ச்சி ஏற்படும் சூழல் மாறி வருவதாக வானிலை ஆய்வுகள் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளன.
வெய்யில் காலங்களில் மட்டுமல்ல, தற்போதெல்லாம் சென்னையில் சாதாரண காலங்களிலும் இரவில் வீடுகளுக்குள் வெப்ப நிலை குறைவதில்லை என்பதை வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Advertisement
அதாவது, சிறிய மற்றும் நடுத்தர வீடுகளுக்குள் இரவில் வெப்பநிலையானது 32 டிகிரி செல்சியஸ் அளவில் இருப்பதாகவும், இது ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் இப்படியே நீடிப்பதாகவும் அதாவது 5800 மணி நேரங்கள் மக்கள் வீடுகளுக்குள் கடுமையான வெப்பத்தில்தான் வாழ்வதாகவும் வெகு அரிதாகவே வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைவதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
பொதுவாக வீடுகளுக்குள் இரவில் வெப்பம் அதிகமாக இருப்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என்றாலும், அதனை ஆய்வுகள் மூலம் தரவுகளாக அறியும்போது சற்று அதிர்ச்சி அதிகரிக்கவே செய்கிறது.