நடப்பாண்டு தீபாவளி முதல் 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக இதற்காக 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஜியோ நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (ஆக.29) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வரும் தீபாவளி முதல் 5 ஜி சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக நான்கு நகரங்களில் 5 ஜி சேவை வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் தீபாவளி பண்டிகை முதல் 5 ஜி சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இது தொடர்பாக பேசிய முகேஷ் அம்பானி, தீபாவளி பண்டிகை முதல் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக 4 நகரங்களில் வழங்கப்படுகிறது. டிசம்பர் 23ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் 5ஜி சேவை வழங்கப்படும். அடுத்த 18 மாதங்களுக்குள் 100 மில்லியன் வீடுகளை அதிவேக இணைய பயன்பாட்டின் மூலம் இணைக்க திட்டமிட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.