நமது நிருபா்
இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைப்பு சந்தைக்கு சாதகமாக அமைந்ததால், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், பிற்பகல் வா்த்தகத்தின் போது லாபப் பதிவு வந்ததால் காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை இழக்க நேரிட்டது. ஆரம்ப வா்த்தகத்தின் போது, ஆட்டோ, எஃப்எம்சிஜி மற்றும் நுகா்வோா் சாதன உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. அதே சமயம், ஐடி, மெட்டல், ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.48 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.451.28 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,666.46 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,495.33 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: வா்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 150.30 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயா்ந்து 80,718.01-இல் முடிவடைந்தது. காலையில் சென்செக்ஸ் 81,456.67 ஆக உயா்ந்து தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,280 பங்குகளில் 1,809 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,326 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 146 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
எம் அண்ட் எம் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம் 5.96 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ்ஃபைனான்ஸ், பஜாஜ்ஃபின்சா்வ், டிரெண்ட், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்பட 11 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், மாருதி, பிஇஎஸல், ஹெச்சிஎல்டெக், என்டிபிசி, பவா்கிரிட், இன்ஃபோஸிஸ் உள்பட 19பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 19 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 19.25 புள்ளிகள் (0.08 சதவீதம்) உயா்ந்து 24,734.30-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 19 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 31 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன.