என் வீட்டு மொபைல் ஒலித்து எடுத்தால், 'குடியில் சிறந்த காரைக்குடி' என்று குரல் கேட்டால் அது லட்சுமி. இவர் டிசம்பர் 13, 1952இல் புகழ் பெற்ற இயக்குநர் ஒய்.வி. ராவுக்கும், தமிழ்நாட்டின் மௌனப் படகால இயக்குநரும், நடிகையுமான டி.பி. ராஜலெட்சுமியின் இயக்கத்தில் எட்டு வயதிலேயே நடித்த ருக்மணி அம்மாவுக்கும் ஒரே மகளாகப் பிறந்தார்.
மல்லியம் ராஜகோபாலின் 'ஜீவனாம்சம்' படத்தில் 16 வயதில் அறிமுகமாகி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என்று 400 படங்களுக்கும் மேல் நடித்தார். பிலிம் ஃபேர் விருது, வங்காள திரை விருதுகள் என்று பல தடவை பெற்றார். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கு வழங்கப்படும் 'ஊர்வசி' தேசிய விருதை பெற்றார். சின்னத்திரையில் குறிப்பாக கன்னட சுவர்ணா தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் நடத்தி வருகிறார்.
1971இல் ஐஸ்வர்யாவின் தாயான லட்சுமி, நேர்மையான காவல் துறை அதிகாரியாக வரவே ஆசைப்பட்டார். அதனால்தான் என்னவோ சிவகாசிப் பட்டாசு லட்சுமி போல் சமூக அவலங்களைப் பேசினால் இவரும் ஒரு வெடியாகிப் பேசுவார்.
1976இல் நான் எழுதிய 'தூண்டில் மீன்' படத்தில் லட்சுமிதான் கதாநாயகி என்று அதன் தயாரிப்பாளர் வி.சி.கணேசன், டைரக்டர் என் மரியாதைக்குரிய ரா. சங்கரன் மூவரும் முடிவெடுத்தபோது லட்சுமி என்னிடம் அப்போது வெளியாகி கேரளா, தமிழ்நாடு எங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த, பிரபல இயக்குநர் சேது மாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'சட்டைக்காரி' மலையாளப் படத்தை பார்க்கச் சொன்னார்.
நாங்கள் அதை மக்கள் வெள்ளத்தோடு அன்றைய மவுண்ட் ரோட்டிலிருந்த எல்பின்ஸ்டோன் தியேட்டரில் பார்த்து அதில் நடித்த மோகன் சர்மாவைத் தமிழில் ஹீரோவாக அறிமுகம் செய்தோம். இது ஹிந்தியிலும் லட்சுமி நடித்து வெற்றிகரமாக 'ஜூலி' என்ற பெயரில் ஓடியது.
'தூண்டில் மீன்' கிளைமாக்ஸில் எனக்கும் டைரக்டர் சங்கரய்யருக்கும் காட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது விவாதமாகி, நான் கோபித்துக் கொண்டு நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டுக்குப் போய் விட்டேன். லட்சுமி, இயக்குநர் சங்கரய்யரை 'சந்தேக ஐயர்'' என்று கேலி செய்வார். எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையைத் தீர்க்க லட்சுமி ஒரு சமாதானம் சொன்னார்.
'இரண்டு பேர் சொல்லுகிற படியும் எடுங்கள். நான் கால்ஷீட் தருகிறேன். தியேட்டரில் இருவருக்கும் காட்சிகளைப் போட்டுக் காண்பித்து முடிவு செய்யலாம்'' என்று சொன்னார். அதன்படி எடுத்ததை ஜெமினி வாசன் மாப்பிள்ளை ஜி.எஸ்.மணியனுக்கும், மகன் பாலசுப்ரமணியனுக்கும் போட்டுக் காண்பித்தோம். அவர்கள் இருவரும் நான் எழுதிய கிளைமாக்ஸ் நன்றாக இருந்தது என்று சொன்னார்கள்.
உடனே சங்கரய்யர் என் கைகளைப் பிடித்து 'உமக்கு அதிர்ஷ்டம்'' என்று கைக் குலுக்கினார். அது வெற்றிப் படமானது. 1973இல் பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ்க்கு தமிழ்ப் படவுலகில் யாரையுமே தெரியாது. மூதறிஞர் ராஜாஜியின் 'திக்கற்ற பார்வதி'க்கு நான் வசனம் எழுதிய போது, லட்சுமியைச் சந்தித்து ஒரு கிராமத்துக் குடிகாரக் கணவனின் மனைவி பார்வதியாக நடிக்கச் சொல்லி மொத்தப் பணமே 3,000 ரூபாய் என்ற போது, லட்சுமி 20,000 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் புத்தகத்தைப் படித்து விட்டுச் சம்மதித்தார்.
ஓசூரில் காலை ஆறு மணி முதல் இரவு 12 மணி வரை ராஜாஜி பிறந்த வீட்டிலும் வெளிப்புறப் படப்பிடிப்பு 17 நாள்கள் நடந்து முடிந்தது. கடைசி நாளில் அந்த 3,000 ரூபாயை அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் கொடுத்து விட்டார்.
ஓசூரில் அந்தப் படப்பிடிப்பில் ஒரு நாள் இரவில், 'திக்கற்ற பார்வதி' என்னை மிகவும் பாதித்தது'' என்று சொல்லி என்னிடம் லட்சுமி கண் கலங்கி விம்மியபோது அந்தக் கண்ணீர் என் உள்ளங்கையில் விழுந்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. 'திக்கற்ற பார்வதி' தேசிய விருது பெற்றது. எங்களின் திரை உலக அடையாளமாக என்றும் இருக்கும்.
நவராத்திரியில் கொலு வைத்தபோது குழந்தை, மனைவி, நான் மூவரும் லட்சுமி வீட்டிற்குப் போனோம். அப்போது என் குழந்தை வாயில் விரல் வைத்தாள். லட்சுமி விரலில் ஒரு அடி அடித்ததுதான் தெரியும். என் குழந்தை வாயில் விரல் வைப்பதை நிறுத்தினாள். 'மெய்யம்மை அழகம்மை'' என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் ஒரே நடிகை லட்சுமி.
ஒரு நாள் 'என் மனைவியை விமானத்தில் காசிக்கு அனுப்பி விட்டு வந்ததாக'' லட்சுமியிடம் சொன்னேன். உடன் அவர் 'காரைக்குடி நான் இன்னும் காசி பார்க்கலை. அடுத்த தடவை போற போது சொல்லுங்க'' என்று காசி விசுவநாதரைக் கும்பிட்டார்.
என் முதல் இயக்கம், தயாரிப்பான 'அச்சாணி' படத்தில் 1977இல் ஷோபாவை முதன் முதலில் நடிக்க வைத்து இரண்டு ஊர்வசிகள் நடித்த ஒரே படம் என்ற பேரை வாங்கித் தந்தார். மற்றவர்களுக்கெல்லாம் நடிகை லட்சுமி. எனக்கு ஐஸ்வர்ய லட்சுமி.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.