பிரபஞ்சத்தைப் பற்றி அறிந்து கொள்வதில் விண்வெளி தொலைநோக்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் 1990-ஆம் ஆண்டு முதல் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் ஹபிள் தொலைநோக்கி ஏராளமான தகவல்களைத் தந்துள்ளது. அதைவிட பிரம்மாண்டமான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.
இந்தத் தொலைநோக்கியை உருவாக்க 30 ஆண்டுகளும், 10 பில்லியன் டாலரும்
(சுமார் ரூ.75,000 கோடி) செலவாகியுள்ளது.
இந்தத் தொலைநோக்கியால் வானில் உள்ள எதையும் பார்க்க முடியும். ஆனால், பிரபஞ்சத்தில் முதலில் உருவான நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளியைக் காண்பதே இதன் பிரதான நோக்கமாகும். பெருவெடிப்பில் (பிக் பேங்) பிரபஞ்சம் உருவானபோது, ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியத்தின் ஒரு சிறிய பகுதி ஆகிய மூன்று வேதியியல் கூறுகளையே அது கொண்டிருந்தது.
உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான கார்பன், ஆக்சிஜன் போன்ற பிற அனைத்து வேதியியல் கூறுகளும் நட்சத்திரங்களின் மையத்தில் அணுக்கதிர் விளைவுகளால்தான் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அந்த வகையில் நம்மைச் சுற்றி நாம் காணும் எல்லாவற்றின் ஆரம்பத்தையும், நாம் எப்படி உருவானோம் என்பதையும் புரிந்து கொள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவும்.
ஹபிள் தொலைநோக்கி அதன் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட பிரதான கண்ணாடி மூலம் ஒளியைச் சேகரிக்கிறது. அதேவேளையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி 6.5 மீட்டர் விட்டம் கொண்ட பிரதான கண்ணாடியைக் கொண்டுள்ளது. இத்துடன் பிற உபகரணங்களும் சேர்த்து இந்தத் தொலைநோக்கி ஒரு டென்னிஸ் மைதானத்தின் அளவில் இருக்கிறது. இது மிகப்பெரியதாக இருந்தாலும், ராக்கெட் மூலம் செலுத்தப்படும்போது மடித்து பொருத்தப்படும்.
அகச்சிவப்புக் கதிர்களில் ஹபிள் தொலைநோக்கியால் கண்டறிய முடியாத ஒளியைக் கூட கண்டறியும் வகையில் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் கண்களுக்கு இந்த ஒளி தெரியாது. ஆனால், பிரபஞ்சத்தின் மிக தொலைவில் உள்ள பொருள்களிலிருந்து வரும் ஒளியாகும் இது. பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஐரோப்பிய ஏரியானா -5 ராக்கெட் மூலம் டிசம்பர் 22-ஆம் தேதி இந்த வெப் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
பூமியிலிருந்து 16 லட்சம் கி.மீ. தொலைவில் இந்தத் தொலைநோக்கியை ராக்கெட் நிலைநிறுத்தும். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமும் நாசாவுடன் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.