முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - (16-10-2022)

சென்ற மாதம் நாமக்கல் கம்பன் விழாவுக்கு நான் சென்றதும் வந்ததும், ஒரு சுவாரஸ்யமான, சாகசமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய பயணம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:35 AM
பகிர்:

சென்ற மாதம் நாமக்கல் கம்பன் விழாவுக்கு நான் சென்றதும் வந்ததும், ஒரு சுவாரஸ்யமான, சாகசமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய பயணம். உயர்நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமாருடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிந்தது மகிழ்ச்சி என்றால், "கம்பர் விருது' பெற்ற டாக்டர் சரஸ்வதி ராமநாதனையும், "கம்பர் மாமணி விருது' பெற்ற பெரியவர் புலவர் மு. ராமசாமியையும் சந்திக்க முடிந்தது அதைவிட மகிழ்ச்சி.

பெரியவர் புலவர்மு. ராமசாமிக்கு அகவை 90 கடந்துவிட்டது என்றால், எண்பதைக் கடந்தவர் முத்தமிழ் அரசி "பள்ளத்தூர்' டாக்டர் சரஸ்வதி ராமநாதன். அவர்கள் இருவருக்கும் இப்போதும் இருக்கும் தமிழார்வமும், உற்சாகமும் எங்கள் எல்லோருக்கும் பத்து வயது குறைந்து விட்டாற் போன்ற உணர்வை ஏற்படுத்தின.

டாக்டர் சரஸ்வதி ராமநாதன் நாமக்கல் கம்பன் விழாவிற்காக ஹைதராபாதிலிருந்து வந்திருந்தார். பல பட்டிமன்றங்களில் அவர் பேச, பார்வையாளர்களில் ஒருவனாக அமர்ந்து கைதட்டி ரசித்த அனுபவம் எனக்கு உண்டு. காரைக்குடி கம்பன் விழாக்களில் அவரது பேச்சை ரசிப்பதற்காகவே ஒரு கூட்டம் காத்திருக்கும். தனது பேச்சுக்கு இடையே அவர் இனிமையான குரலில் பாடுவதன் மூலம் ஏனைய பேச்சாளர்களிலிருந்து வித்தியாசப்படுவார்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1981 டிசம்பர்11-ஆம் தேதி, எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் நேரடிப் பார்வையில் நடந்த அந்த விழாவில், அப்போதைய மத்திய நிதியமைச்சர் ஆர். வெங்கட்ராமன், பஞ்சாப் முதல்வர் தர்பாரா சிங் என்று பலர் கலந்து கொண்டனர். அன்று தமிழக ஆளுநராக இருந்த சாதிக் அலி தொடங்கி வைத்த பாரதியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு வேறு பல சுவாரஸ்யங்களும் உண்டு.

இரண்டாம் நாள் (12-ஆம் தேதி) காலையில் வலம்புரி ஜான் தலைமையில் "இளைய பாரதம்' என்கிற நிகழ்ச்சி. அதில் "எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே' என்கிற தலைப்பில் பேசிய செல்வன் வி. ராமசுப்பிரமணியம், இப்போது உச்சநீதிமன்ற நீதிபதி; "அன்பு கனிந்த கனிவே சக்தி' என்கிற தலைப்பில் பேசிய செல்வி சுதா சேஷய்யன், இப்போது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.

அன்று பிற்பகல் 3 மணிக்கு பேராசிரியை அ.ரா. இந்திரா தலைமையில் நடந்த உரையரங்கத்தில் முதல் பேச்சாளர், "பெண் கல்வி' குறித்துப் பேசிய சரஸ்வதி ராமநாதன். அவரைத் தொடர்ந்து "பெண்ணுரிமை' என்கிற தலைப்பில் இளம்பிறை மணிமாறனும், "பெண் எழுச்சி' என்கிற தலைப்பில் இரா. காந்திமதியும் பேசினார்கள். கடைசியாக, "பெண் விடுதலை' என்கிற பெயரில் உரையாற்றியது யார் தெரியுமா? செல்வி ஜெயலலிதா. அவரை அரசியலுக்கு எம்.ஜி.ஆர். அழைத்துவரக் காரணமாக அமைந்தது எட்டயபுரம் நிகழ்வுதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நாமக்கல் நிகழ்ச்சியின்போது, டாக்டர் சரஸ்வதி ராமநாதனுடன் நிறையப் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். உடனடியாகத் திரும்ப வேண்டியிருந்ததால், பேச முடியவில்லை. அகவை எண்பதைக் கடந்தவர்கள் ஆயிரம் பிறை கண்டவர்கள். டாக்டர் சரஸ்வதி ராமநாதன் ஆயிரம் பிறைகளை மட்டுமல்ல, ஆயிரத்துக்கும் அதிகமான இலக்கிய மேடைகளில் உரையாற்றியவரும் கூட.

அவரது தாயின் வயிற்றில் கருவாக இருந்தபோது, பரமாச்சாரியாரிடம் ஆசி பெறப் போனாராம். பெண்ணாகப் பிறந்தால் "சரஸ்வதி' என்று பெயர் வைக்கச் சொன்னாராம். அவரது ஆசிர்வாதமும், சரஸ்வதியின் கடாக்ஷமும் இணைந்தால் கேட்கவா வேண்டும்? சரஸ்வதி ராமநாதன் போகாத ஊரும் இல்லை... ஏறாத மேடையும் இல்லை... பேசாத இலக்கியமும் தமிழில் இல்லை!

---------------------------

தமிழ்மொழி வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை பொதுவுடைமை இயக்கம் நல்கியிருக்கிறது. தோழர்கள் ப. ஜீவானந்தம், எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே.), ஆர்.கே. கண்ணன், விஜயபாஸ்கரன், தா. பாண்டியன், நா. வானமாமலை உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் வள்ளுவர், கம்பர், பாரதி மட்டுமல்லாமல், சங்க இலக்கியங்களிலும் ஆழங்காற்பட்ட புலமை மிக்கவர்களாக இருந்தனர். மொழியின் அடிப்படையில் அவர்கள் அரசியல் நடத்தவில்லை என்பதால், அவர்களது பங்களிப்பு வெளியில் தெரியாமல் போய்விட்டது.

மதுரையில் எனது பள்ளி, கல்லூரி நாள்களில் நான் அடிக்கடி பார்த்த, ஆனால் நெருங்காத ஆளுமை தோழர் கே.டி.கே. தங்கமணி. பொதுக்கூட்டங்களில் அவர் பேசக் கேட்டிருக்கிறேன், அவ்வளவே.

"மணிமேகலை பற்றி' எனும் நூல் கே.டி.கே. தங்கமணி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு எனும்போது, அதை ஆர்வத்துடன் படிக்கத் தோன்றியது. சேலம் சிறையில் 1962-ஆம் ஆண்டு தோழர்கள் எம்.ஆர். வெங்கட்ராமன், வி.பி. சிந்தன், என். சங்கரய்யா, கே.அனந்தன் நம்பியார் உள்ளிட்டவர்களுடன் இருந்தபோது, அவ்வப்போது மணிமேகலை குறித்துத் தோன்றிய கருத்துகளை எழுதி இருக்கிறார் அவர். அவை "தாமரை' இதழில் வெளிவந்தன. 1987-இல் வெளிவந்த அந்தப் புத்தகம் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது.

பல்வேறு கோணங்களில், தர்க்க ரீதியாகவும், சமூகப் பார்வையுடனும், இலக்கிய ஒப்பாய்வுகளுடனும், சமய அடிப்படையிலும் அணுகுகின்றன கட்டுரைகள்.
கே.டி.கே. தங்கமணியின் கட்டுரைகளுக்கு நிகரானது, அந்தக் கட்டுரைகளைத் தொகுத்துச் செப்பனிட்ட ஆர். பார்த்தசாரதி (ஆர்.பி.எஸ்.) எழுதியிருக்கும் சிறப்புரை.

சமீபத்தில் நான் மிகவும் ரசித்த கவிதை, கவிஞர் தேவதச்சனின் "நீளம்'. ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பாருங்கள் நீளத்தின் ஆழம் புரியும்.

பூமிக்கு
விருந்தாளியாய் வந்தவர்களில்
நானும் ஒருவன்
அழைப்பு மணியை
அழுத்திவிட்டு
காத்திருக்கிறேன்
வாசற்படிக்கும் வீட்டுக்கும்
நடுவே உள்ள தூரம்
எத்தனை நூற்றாண்டு நீளம்

முழு கட்டுரையைப் படிக்க →