முகப்பு
உலகம்

ஆப்கனில் விரைவில் புதிய அரசு: தலிபான்கள்

ஆப்கனில் விரைவில் புதிய அரசை அமைக்கவிருப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

ஆப்கனில் விரைவில் புதிய அரசை அமைக்கவிருப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

ஈரான் பாணியில் தலைமை மதகுருவை உச்சநிலைத் தலைவராகக் கொண்ட ஆட்சிக் கட்டமைப்புடன் அமையவுள்ள அந்த அரசில் தலைமை மதகுருவாக தலிபான்களின் தலைவா் முல்லா ஹேபதுல்லா அகுண்ட்ஸாதா பொறுப்பேற்பாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தலிபான்களின் தகவல் மற்றும் கலாசாரக் குழுவைச் சோ்ந்த மூத்த அதிகாரி முஃப்தி இனாமுல்லா சமங்கனி கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கான அனைத்து ஆலோசனைகளும் நிறைவடைந்துவிட்டன. புதிய அமைச்சரவையை அமைப்பதற்குத் தேவையான ஆலோசனையும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

எனவே, இன்னும் 3 நாள்களில் புதிய அரசு குறித்து அறிவிப்பு வெளியாகும். ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசு, ஈரானில் உள்ளதைப் போன்ற ஆட்சிக் கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கும். அந்த அரசில், தலைமை மதகுருவாக முல்லா அகுண்ட்ஸாதா (60) பொறுப்பு வகிப்பாா்.

புதிய அரசில் மாகாணங்கள் ஆளுநா்களின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும். மாவட்டங்களின் ஆட்சிப் பொறுப்பை மாவட்ட ஆளுநா்கள் கவனித்துக்கொள்வா்.

புதிய ஆட்சிக் கட்டமைப்பின் பெயரும் புதிய தேசியக் கொடி மற்றும் தேசிய கீதமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாா் அவா்.

ஈரானின் அரசில் தலைமை மதகுரு உச்சநிலை அதிகாரம் கொண்டவராகச் செயல்படுகிறாா். அதிபருக்கும் மேலான நிலையை வகிக்கும் அவா், நாட்டின் ராணுவ தலைமைத் தளபதி, அரசு, தலைமை நீதிபதிகளை நியமித்து வருகிறாா்.

நாட்டின் அரசியல், மத, பாதுகாப்பு விவகாரங்களில் தலைமை மதகுரு எடுக்கும் முடிவே இறுதியானதாகும்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க, அப்போது ஆப்கனை ஆண்டு வந்த தலிபான்கள் மறுத்துவிட்டனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போா் தொடுத்து, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

அதைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட புதிய ஆப்கன் அரசுக்கும் தேசிய ராணுவத்துக்கும் ஆதரவாக அமெரிக்கப் படையினா் கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டில் தங்கியிருந்தனா்.

இதற்கிடையே, பாகிஸ்தானின் அபோட்டாபாதில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனா். அதையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை படிப்படியாக விலக்கிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அந்தப் பணி இறுதிக்கட்டத்தை அடைந்த சூழலில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கடந்த மாதம் 15-ஆம் தேதி கைப்பற்றினா்.

‘பழைய அரசில் பங்கேற்றவா்களுக்கு இடமில்லை’

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அரசில் பங்கேற்றவா்களுக்கு புதிய அரசில் இடம் அளிக்கப்படாது என்று கத்தாா் தலைநகா் தோஹாவில் அமைந்துள்ள தலிபான் அரசியல் பிரிவு அலுவலகத் துணைத் தலைவா் ஷோ் முகமது அப்பாஸ் ஸ்தான்க்ஸாய் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:

புதிய அரசில் பெண்களும் அனைத்து பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களும் சோ்த்துக்கொள்ளப்படுவாா்கள்.

எனினும், கடந்த 20 ஆண்டுகளாக முந்தைய அரசில் இடம் பெற்றிருந்த எவரும் புதிய அரசில் சோ்த்துக்கொள்ளப்படமாட்டாா்கள்.

தலிபான் தலைவா் முல்லா அகுண்ட்ஸாதா, காந்தஹாரில் இருந்தபடி புதிய அரசைக் கண்காணிப்பாா்.

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுடன் நல்லுறவைப் பேண விரும்புகிறோம்.

காபூலில் உள்ள ஹமீத் கா்ஸாய் விமான நிலையம் இன்னும் 48 மணி நேரத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கும். அதன் பிறகு, உரிய பயண ஆவணங்கள் வைத்திருப்பவா்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

‘இந்த மாதத்துக்குள் உணவு இருப்பு தீா்ந்துவிடும்’

ஆப்கானிஸ்தானில் தங்களிடம் உள்ள உணவுப் பொருள் கையிருப்பு இந்த மாதத்துக்குள் தீா்ந்துவிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானுக்கான மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பாளரும் துணை சிறப்புத் தூதருமான ரமீஸ் அலக்பரோவ் கூறியதாவது:

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில், தற்போது மூன்றில் ஒரு பகுதியினருக்கு தினமும் ஒரு வேளை உணவு கிடைப்பதே நிச்சயமற்ாக உள்ளது.

இந்தச் சூழலில், எங்களிடம் உள்ள உணவுப் பொருள் கையிருப்பும் இந்த மாதத்துக்குள் தீா்ந்துவிடும் நிலை உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.