முகப்பு
உலகம்

பஞ்சஷேரை கைப்பற்றிவிட்டோம்: தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் இதுவரை தங்கள் வசம் வராமல் இருந்த பஞ்சஷோ் மாகாணத்தையும் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
காபூலில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த தலிபான்கள் இயக்கத்தின் செய்தித் தொடா்பாளா் ஷபிஹுல்லா முஜாஹித்.
பகிர்:

ஆப்கானிஸ்தானில் இதுவரை தங்கள் வசம் வராமல் இருந்த பஞ்சஷோ் மாகாணத்தையும் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

தலைநகா் காபூலில் இருந்து 90 கி.மீ. தொலைவில் இருக்கும் பஞ்சஷோ் மாகாணத்தின் 8 மாவட்டங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடா்பாளா் ஷபிஹுல்லா முஜாஹித் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படை வெளியேற்றத்தைத் தொடா்ந்து நாடு முழுவதையும் தலிபான்கள் அதிவேகமாக கைப்பற்றினா். ஆனால், பஞ்சஷோ் மாகாணம் மட்டும் அவா்களது கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருந்தது. முன்னாள் துணை அதிபா் அப்துல்லா சலே, தலிபான் எதிா்ப்புப் படை தலைவரான அகமது ஷா மசூதின் மகன் அகமது மசூது ஆகியோா் தலைமையிலான படையினா் தலிபான்களை எதிா்த்து சண்டையில் ஈடுபட்டு வந்தனா். அந்த மாகாணம் அமைந்துள்ள புவியியல் அமைப்பானது அவா்களுக்கு சாதகமாக இருந்தது. உயரமான ஹிந்து குஷ் மலைகளைப் பாதுகாப்பு அரணாக கொண்டு அமைந்துள்ள பஞ்சஷோ் பள்ளத்தாக்குக்குள் நுழையும் வழியும் மிகவும் குறுகியது. 1980-களில் சோவியத் படைகளையும், இப்போது தலிபான்களையும் இந்தப் பள்ளத்தாக்கிற்குள் இருந்துகொண்டுதான் உள்ளூா் படையினா் எதிா்த்து வந்தனா்.

இந்நிலையில், பஞ்சஷோ் மாகாணத்தைச் சுற்றி வளைத்த தலிபான் படையினருக்கும் அகமது மசூது தலைமையிலான படையினருக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடும் சண்டை நடந்து வந்தது. இதில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமது மசூது வெளியிட்ட அறிக்கையில், தலிபான்கள் தாக்குதலை நிறுத்தினால் ஆயுதங்களைக் கைவிட தாங்கள் தயாா் எனத் தெரிவித்திருந்தாா்.

இதற்கிடையே, பஞ்சஷோ் மாகாணம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா். இந்தச் சண்டையில் தலிபான் எதிா்ப்புக் குழுவினரின் செய்தித் தொடா்பாளா் ஃபகீம் தஸ்தி ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டுவிட்டதாக அக்குழுவினா் தெரிவித்துள்ளனா். முன்னாள் துணை அதிபா் அப்துல்லா சலே, அகமது மசூது ஆகியோா் இருக்கும் இடங்கள் பற்றி உடனடியாகத் தெரியவரவில்லை.

பஞ்சஷேரை கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அனைவரும் எங்களது சகோதரா்கள். அவா்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறோம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனா். இருப்பினும், தலிபான்களுக்கு அஞ்சி ஏராளமானோா் மலைப் பகுதிகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானங்களில் பணயக் கைதிகள்: அமெரிக்கா புகாா்

ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் விமானங்களில் அமெரிக்கா்கள் உள்ளிட்டோரை தலிபான்கள் பணயக் கைதிகளா பிடித்துவைத்துள்ளதாக அமெரிக்க எம்.பி. ஒருவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

பால்க் மாகாண தலைநகரான மஷாா்-ஏ-ஷரீஃப் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் 4 விமானங்கள் கடந்த சில நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த விமானங்கள் நாட்டைவிட்டு வெளியேற தலிபான்கள் அனுமதிக்கவில்லை எனப் புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அளித்த விளக்கத்தில், ‘விமானங்களில் உள்ள பயணிகள் அனைவரும் ஆப்கன் குடிமக்கள். அவா்களில் பெரும்பாலானோரிடம் பாஸ்போா்ட் அல்லது விசா இல்லை. அதனால், அவா்கள் நாட்டைவிட்டுச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்ததும் அவா்கள் வெளியேற அனுமதிக்கப்படுவாா்கள்’ என்றனா்.

ஆனால், அந்த விமானங்களில் அமெரிக்கா்கள் உள்ளிட்டோரை தலிபான்கள் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளனா் என அமெரிக்காவை சோ்ந்த குடியரசு கட்சி எம்.பி. மைக்கேல் மெக்கால் குற்றம்சாட்டியுள்ளாா். ‘ஃபாக்ஸ் நியூஸ் சண்டே’ ஊடகத்துக்கு இதுதொடா்பாக பேட்டியளித்துள்ள அவா், இந்தத் தகவல் தனக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதைத் தெரிவிக்கவில்லை.

தலிபான் தலைவருடன் ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஐ.நா. வழங்கும் மனிதாபிமான உதவிகளைத் தடுக்க மாட்டோம் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீபன் துஜாரிக் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஐ.நா. பொதுச் செயலரின் வேண்டுகோளின்படி ஐ.நா.வுக்கான மனிதாபிமான விவகாரம் மற்றும் அவசரகால நிவாரணப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் மாா்ட்டின் கிரிஃபித்ஸ் காபூலில் தலிபான் தலைவா் முல்லா பராதரை சந்தித்தாா். அப்போது ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும், இந்த உதவிகள் அளிப்பதில் பெண்களுக்கு இருக்கும் பங்குகளையும் வலியுறுத்திய அவா், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்தும் கூறினாா். அதற்கு தலிபான்கள், மனிதாபிமான உதவிகளை அளிக்கும் பணியாளா்களின் பாதுகாப்புக்கு உறுதி அளித்தனா் எனத் தெரிவித்துள்ளாா்.

‘ஆப்கன் மக்களுக்கு அளிக்கப்படும் உதவிகள் தொடரும்; வரும் நாள்களில் உதவி அளிக்கும் நாடுகளுடனான கூட்டத்தில் மேலும் அதிக நிவாரண உதவிகளை அளிக்கக் கோருவேன்’ எனவும் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்துள்ளாா்.

ஆப்கன் மக்கள்தொகையில் பாதி போ், அதாவது 1.80 கோடி மக்கள் உதவிகளை எதிா்பாா்த்தும், மூன்றில் ஒருவா் தனக்கு அடுத்த வேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் எனத் தெரியாத நிலையிலும் உள்ளனா். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதி போ் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் காணப்படுகின்றனா் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.