முகப்பு
உலகம்

ஷின்சோ அபே படுகொலை: குற்றவாளி யார்? எதற்காக சுட்டார்?

ப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
ஷின்சோ அபே படுகொலை: குற்றவாளி யார்? எதற்காக சுட்டார்?
பகிர்:

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர் என்று தகவல்கள் 2000ஆவது ஆண்டுகளில் அவர் ஜப்பானின் கடற்படையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி, நீக்கப்பட்டவர் என்றும், ஷின்சோ அபேவின் செயல்பாடுகளில் அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால்தான் அவரைக் கொன்றதாக காவல்துறை விசாரணையில் குற்றவாளி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவரது கழுத்து மற்றும் தோள்பட்டை எலும்புப் பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.

அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதே, மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அபேவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நாரா என்ற நகரில் வசித்து வந்த டெட்சுயா யாமாகாமி என்ற 41 வயது நபரை ஜப்பான் காவல்துறை கைது செய்தனர். அவரது வீட்டை சோதனை செய்ததில், வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு ஜப்பான் நகரமான நாராவில், அந்நாட்டு நேரப்படி, காலை 11.30 மணியளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) சுடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

துரிதமாக செயல்பட்ட காவல்துறை, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரின் அடையாளத்தைக் கண்டறிந்து கைது செய்ததோடு, சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். அது நாட்டுத் துப்பாக்கி என்றும் கூறப்படுகிறது.

நாரா நிஷி காவல்நிலையத்தில், குற்றவாளியிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட அந்த நபர், காவல்துறையிடமிருந்து தப்பியோட முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. அவரிடம் நடத்திய விசாரணையில், ஷின்சோ அபே மீது அதிருப்தியில் இருந்ததாகவும் கொலை செய்ததாகவும் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.