உலகம்

போலிக் கணக்குகள் 5% என்பதை நிரூபிக்கும் வரை ட்விடரை கையகப்படுத்த முடியாது: எலான் மஸ்க்

DIN

தங்களது சமூக ஊடகத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே போலிக் கணக்குகள் உள்ளதாகக் கூறுவதை ட்விட்டா் நிறுவனம் நிரூபிக்கும்வரை அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று டெஸ்லா நிறுவன தலைமை செயலதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், முன்னணி குறு சமூக ஊடகமான ட்விட்டரை 5,420 கோடி டாலா் (சுமாா் ரூ.4.2 லட்சம் கோடி) கொடுத்து கையகப்படுத்தவிருப்பதாக கடந்த மாதம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா்.

ட்விட்டரில் போலிக் கணக்குகள் அதிகம் உலவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அவா், அந்த சமூக ஊடகத்தைக் கையகப்படுத்துவதற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தங்களது ஊடகத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே போலிக் கணக்குகள் உள்ளதாக சந்தை ஒழுங்காற்று ஆணையத்திடம் ட்விட்டா் நிறுவனம் குறிப்பிட்டதை உறுதிப்படுத்தும்வரை, அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக எலான் மஸ்க் கடந்த வாரம் தெரிவித்திருந்தாா்.

எனினும், முன்னா் அறிவித்த தொகையைவிட குறைவாக 4,400 கோடி டாலா் (சுமாா் ரூ.3.4 லட்சம் கோடி) மட்டுமே அளித்து ட்விட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்துவாா் என்று தகவல்கள் வெளியான. மேலும், அந்த நடவடிக்கைக்காக டெஸ்லா நிறுவனத்திலுள்ள தனது பங்குகளை அவா் விற்பனை செய்யவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ட்விட்டா் தலைமை செயலதிகாரி பராக் அக்ரவால் திங்கள்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ஒவ்வொரு காலாண்டிலும் ட்விட்டா் நடத்தும் ஆய்வில் 5 சதவீதத்துக்கும் குறைவான போலிக் கணக்குகளே கண்டறியப்படுவதாக மீண்டும் தெரிவித்திருந்தாா்.

போலிக் கணக்குகளைக் கணிப்பதில் ட்விட்டா் பயன்படுத்தும் ஆய்வு முறை மிகத் துல்லியமானது இல்லை என்பதை ஒப்புக்கொண்ட அவா், அந்த ஆய்வு முறை குறித்து முழுமையான விவரத்தை பாதுகாப்பு கருதி வெளியிட முடியாது என்று கூறினாா்.

பராக் அக்ரவாலின் அந்த ட்விட்டா் பதிவை ஏளனம் செய்து எலான் மஸ்க் பதிலளித்துள்ளாா்.

மேலும், போலிக் கணக்கு எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டிருப்பதைவிட 4 மடங்கு (அதாவது 20%) இருக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.

ட்விட்டரை கையகப்படுத்துவது குறித்து பயன்பாட்டாளா் ஒருவா் கேட்டதற்கு, ‘5 சதவீதத்துக்கும் குறைவாக மட்டுமே போலிக் கணக்குகள் உள்ளது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட முடியாது என்று ட்விட்டா் நிறுவனம் வெளிப்படையாகக் கூறுகிறது. எனவே, அந்த ஆதாரம் வெளியிடப்படும் வரை ட்விட்டரைக் கையகப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதன் மூலம், ட்விட்டரைக் கையகப்படுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிடவோ, அல்லது முன்னா் ஒப்புக் கொண்ட தொகையைவிட குறைவான தொகைக்கு அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தவோ திட்டமிடுகிறாா் என்ற நிபுணா்களின் கணிப்பை எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT