இந்தியாவில் நான் கொல்லப்படலாம் என அஞ்சுகிறேன்: நீரவ் மோடி கதறல் 
உலகம்

இந்தியாவில் நான் கொல்லப்படலாம் என அஞ்சுகிறேன்: நீரவ் மோடி கதறல்

நீரவ் மோடி, தான் இந்தியாவில் கொல்லப்படலாம் என்று அஞ்சுவதாகக் கூறியுள்ளார்.

DIN

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு பிரிட்டனுக்கு தப்பியோடி, தற்போது அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடி, தான் இந்தியாவில் கொல்லப்படலாம் என்று அஞ்சுவதாகக் கூறியுள்ளார்.

சிறைச்சாலையில் உள்ள மனநல மருத்துவரை சந்தித்த நீரவ் மோடி, என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தினால், சிறைச்சாலையிலேயே தான் கொல்லப்படலாம் அல்லது தற்கொலை செய்து கொள்ளலாம், எதுவாகினும், சிறையிலேயே நான் இறந்துவிடுவேன் என்று அஞ்சுவதாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்த நீரவ் மோடி(51), இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றாா். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிட்டனில் கைது செய்யப்பட்ட அவா், அந்நாட்டுத் தலைநகா் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

வைர வியாபாரி நீரவ் மோடியை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக லண்டன் உயா்நீதிமன்றத்தில் நீரவ் மோடி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, சிறைத் துறை மனநல மருத்துவர் நேரில் ஆஜராகி, நீரவ் மோடி இந்திய சிறையில் கொல்லப்படலாம் அல்லது தானே தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அஞ்சுவதாகக் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல், இந்திய சிறையில் நீரவ் மோடி தன்னைத் தானே ஏதும் செய்து கொள்ளாமல் தடுக்கும் வகையில் தனிநபர் பாதுகாப்பு திட்டம் எதையும் இந்தியா கொண்டிருக்கவில்லை என்றும் அவர் இந்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இந்திய தரப்பு வழக்குரைஞர், நீரவ் மோடி, சிறைச்சாலையில் மனநல மருத்துவரை சந்திக்கவும், மற்றொரு சிறைக் கைதியும் இவருடன் தங்க வைத்து, இவரது பாதுகாப்பை உறுதி செய்யவும், தினமும் இவரை இவரது வழக்குரைஞர் சந்திக்கவும், வாரத்தில் ஒரு நாள் குடும்பத்தினர் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று வாதிட்டார்.

முன்னதாக, நீரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்குரைஞரும் மனநல மருத்துவரின் கருத்தையே முன்வைத்திருந்தார். அதாவது,‘‘நீரவ் மோடியின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவா் தற்கொலை செய்துகொள்வதற்கு அதிக அளவிலான அபாயம் உள்ளது. அவரை நாடு கடத்தி இந்தியச் சிறையில் அடைத்தால், அவரின் நிலைமை மேலும் மோசமடையக் கூடும்.

அவா் மகாராஷ்டிர மாநிலம் மும்பை மத்தியச் சிறையில் அடைக்கப்படவுள்ளதாகவும், அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படும் என்றும் இந்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், அவரின் தற்போதைய மனநிலையை கருத்தில் கொள்ளும்போது அந்த மருத்துவ உதவிகள் போதுமானதாக இருக்காது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா திரும்புவாரா நீரவ் மோடி?
இந்த வழக்கில் நீரவ் மோடிக்கு பாதகமாக தீா்ப்பு அளிக்கப்பட்டால், உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்த 14 நாள்களுக்குள் பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்யலாம். அதுவும் பொது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதி அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டும்தான் அவரால் மேல்முறையீடு செய்ய முடியும்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பும் அவருக்குச் சாதகமாக அமையாவிட்டால், அவரால் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT