வங்கதேசம்: வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து
வங்கதேச தலைநகர் டாக்காவில் பல்வேறு விற்பனையகங்களைக் கொண்ட வணிக வளாகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் பல்வேறு விற்பனையகங்களைக் கொண்ட வணிக வளாகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சனிக்கிழமையன்று, இங்குள்ள ஆயிரக்கணக்கான கடைகளைக் கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான கடைகள் எரிந்து நாசமானது. இந்த வணிக வளாகத்தில் அமைந்திருந்த பிரபலமான ஆடை விற்பனையகத்தில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதால், தீயை தணிக்க நாட்டின் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது.
டாக்காவில் இருந்த மிகப்பெரிய வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் இன்று காலை 5.45 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, விரைவில் மற்ற தளங்களுக்கும் பரவியது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Advertisement
தீயை கட்டுக்குள் கொண்டு வர வங்காளதேச அரசு எல்லைக் காவல்படை, துணை ராணுவப் படையின் 12 படைப்பிரிவுகளை அனுப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் 28 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீ விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு சேவையின் உதவி இயக்குநர் ஷாஜகான் சிக்தர் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் எரிவாயு உருளைகள் கசிவு, பழுதடைந்த குளிர்சாதனங்கள் மற்றும் மோசமான மின் இணைப்பு ஆகியவற்றால் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புகள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.