அமெரிக்க டாலருக்கு பதில் உள்நாட்டு பணம்: மாலத்தீவின் கோரிக்கையை ஏற்ற இந்தியா, சீனா!
மாலத்தீவின் இறக்குமதிக்கான விலை: இந்தியா, சீனா உள்நாட்டு கரன்சிகளில் ஒப்புதல்
மாலத்தீவு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான விலையை அமெரிக்க டாலருக்கு பதிலாக உள்நாட்டு கரன்சிகளில் அளிக்க சீனா மற்றும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக மாலத்தீவு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அந்நாடு ஆண்டுக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மிச்சப்படுத்தும் என தெரிவித்துள்ளது.
மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சர் முகமது சயீத், இந்தியாவின் உயர் ஆணையர் முனு மஹாவரை இரு வாரங்களுக்கு முன்பு சந்தித்து இறக்குமதிக்கான பணத்தை இந்திய ரூபாயில் செலுத்த ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதே போல சீனாவின் வர்த்தக அமைச்சகம் மாலத்தீவு அதிபரின் கோரிக்கையை ஏற்று இறக்குமதிக்கான பணத்தை யுவானில் செலுத்த இரு நாள்களுக்கு முன்பாக அனுமதி அளித்துள்ளது.
ஆண்டுதோறும் மாலத்தீவு 600 முதல் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்களை இந்தியா மற்றும சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான சர்வதேசளவிலான வர்த்தம் அந்தந்த நாடுகளின் கரன்சிகளில் மேற்கொள்ளப்படும்போது இரு நாடுகளின் அந்நிய செலவாணி இருப்பு மிச்சமாகும். மேலும் இது போன்ற முன்னெடுப்பு சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் கை ஓங்கியிருப்பதை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.