வங்கதேசத்தின், முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில், ஆட்சி கவிழ்க்கப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிடும் ஊடகங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டின் இடைக்கால அரசு நேற்று (ஆக.22) அறிவித்திருந்தது.
இதில், ஷேக் ஹசீனா மீது இனப்படுகொலை, மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், அவர் குறித்த செய்திகளை வெளியிட்டால், அது சட்டவிரோதம் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், வங்கதேச இடைக்கால அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
“சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர், கொலையாளி, பாசிசவாதியுமான யூனுஸ் மற்றும் அவரது கூட்டாளிகள், அவாமி லீக் கட்சியின் தலைவரும், மரியாதைக்குரிய பிரமருமான ஷேக் ஹசீனாவின் பேச்சுக்களை வெளியிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாட்டின் ஊடகங்களை ஒழுக்கக்கேடான முறையில் அச்சுறுத்தியுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், யூனுஸ் மற்றும் அவரது இடைக்கால அரசு வங்கதேசத்தில் கும்பல் மற்றும் பாசிச ஆட்சியை நடத்துவதாகவும், அந்நாட்டை பிரிவினைவாதத்தை நோக்கி கொண்டுச் செல்வதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கதேசத்தில் வரும் 2026-ம் ஆண்டு பொது தேர்தல்கள் நடத்தப்படும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது. அதற்கான, ஏற்பாடுகள் நடைபெற்று வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டதாக இடைக்கால அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தேசியளவில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் மூலம் அவரது ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க! ஆக. 26 வரை காவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.