உலகளவில் 10 நிமிடத்திற்கு ஒரு பெண் கொல்லப்படுவதாகவும் நாள்தோறும் சராசரியாக 137 பெண்கள் கொல்லப்படுவதாகவும் ஐ.நா. அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிலும் பெண்கள் தனது மிகவும் நெருங்கிய உறவினர்களால் கொல்லப்படுவது அதிகரித்துள்ளதக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
உலகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் அவை தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு 83,000 பெண்கள், இளம்பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 50,000 பேர்(60%) தனது தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 137 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்படுவதாகவும் 10 நிமிடத்துக்கு ஒரு பெண் கொல்லப்படுவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
காரணம் என்ன?
பாலின சமத்துவம் இல்லாததாலே பெரும்பான்மையான கொலைகள் நடக்கின்றன என்று கூறுகிறது ஐ.நா. மேலும் இடப்பெயர்வு, பொருளாதார பாதுகாப்பின்மை, பாதுகாப்பு அமைப்புகளின் குறைபாடு, இணைய மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாகின்றன.
வீடு, பணியிடங்கள், பள்ளிகள், பொது இடங்கள், சமூக வலைத்தளங்களில் நெருங்கிய உறவினர் மூலமாகவே பெண்களுக்கு வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை ஏற்படுகின்றன. பாலியல் வன்கொடுமை, ஆணவக் கொலைகளும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வருகின்றன.
உலகளாவிய பிரச்னை
பெண் கொலை என்பது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒரு உலகளாவிய நெருக்கடி.
2024 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான பெண் கொலைகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,600 என மதிப்பிடப்பட்டுள்ளது.
யாருக்கு அதிக பாதிப்பு?
அரசியல், பத்திரிகை துறையில் உள்ள பெண்கள், சமூக ஆர்வலர்கள், பொது வாழ்வில் உள்ள பெண்கள் அதிக வன்முறைக்கு ஆளாகின்றனர். அவர்களின் உயிருக்கான அச்சுறுத்தலும் அதிகமாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதிகமாக செயலில் இருக்கும் பெண்களும் சைபர் ஸ்டாக்கிங் எனும் ஆன்லைன் உரையாடல் மூலமாக துன்புறுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கும் நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக இருக்கின்றன.
உலகளவில் 4 பெண் பத்திரிகையாளர்களில் ஒருவருக்கும், ஆசிய-பசிபிக் பகுதியில் 3ல் ஒரு பங்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆன்லைன் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன.
2022 ஆம் ஆண்டில் 81 பெண் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் மற்றும் 34 பெண் மனித உரிமை பாதுகாவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பழங்குடியினப் பெண்களும் பல்வேறு விதமான ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். மேலும், திருநங்கைகளும் வன்முறைக்கு ஆளாகின்றனர்.
எனவே, பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்துகிறது.
தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
சட்ட விதிகளை கடுமையாக்குவதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதன் மூலமும் இழப்புகளைக் குறைக்க ஐ.நா. முயற்சிக்கிறது.
அந்தந்த நாடுகளுடன் இணைந்து பெண்கள் பாதுகாப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவது, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.