இலங்கைக்கு அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மழை மற்றும் அது தொடர்பான சம்பவங்களில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளதாகவும் 14 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பாதுகாப்புக் கருதி மதகுகள் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
மேலும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கம்பளை - நுவரெலியா இடையேயான முக்கிய சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து அப்பகுதியில் முற்றிலும் முடங்கியிருக்கிறது. நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவுகள் காரணமாக இதுவரை அங்கு 6 பேர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் அம்பாறையில், வெள்ள நீரில் கார் கவிழ்ந்த விபத்தில், காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கண்டி மாவட்டத்துக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்நது வருகிறார்கள்.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, மட்டக்களப்பு பகுதி முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழை தொடர்ந்து பெய்து மண் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் வீடுகளும் இடிந்து விழும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
கண்டி, கங்கொடை பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 14 பேர் காணாமல் போயிருப்பதாகவும் மண்சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளில் இருந்த வீடுகளில் வாழ்ந்து வந்தவர்கள், பாதுகாப்பான இடம் என்று கருதி ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, அந்த வீடு இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க... சென்னைக்கு 700 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்! வானிலை மையம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.